திமத்தி டேவிட்
உள்ளூர் எழுத்தாளர்களை ஊக்கு வித்து அவர்களை மேலும் எழுதத் தூண்டும் பணியைப் பல்லாண்டு களாகச் செய்து வரும் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் தனது 40ஆம் ஆண்டு விழாவை அடுத்த மாதம் முழுவதும் பற்பல நிகழ்ச்சிகளுடன் கொண்டாட இருக்கிறது. அதன் விவரங்களை நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத் தில் கழகத்தின் தலைவர் திரு நா. ஆண்டியப்பனும் செயலாளர் திரு சுப. அருணாசலமும் வெளியிட்டனர். கொண்டாட்டத்தின் முன் னோட்ட நிகழ்வாக இடம்பெற உள்ளது செப்டம்பர் 3, 4, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் புகைப்படக் கண்காட்சி.
கொண்டாட்டத்தின் அதிகார பூர்வ தொடக்கவிழா செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி மாலை 6 மணிக்குத் தொடங்கும். சட்ட, நிதி மூத்த துணை அமைச்சர் இந்திராணி ராஜா சிறப்பு விருந்தி னராகக் கலந்துகொண்டு விழா வைத் தொடங்கி வைப்பார்.
அந்நிகழ்ச்சியில் பேராசிரியர், முனைவர் இரா. மோகன், திரு ஸ்டாலின் குணசேகரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றுவார்கள். அதற்கு அடுத்த நாள் 18ஆம் தேதி காலை 10 மணிக்கு 'இலக் கியங்கள் இன்றைய வாழ்க்கைக் குப் பயன்படுகின்றனவா' எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடை பெறும். சிறப்பு விருந்தினராக முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் திரு இரா. தினகரன் பங்கேற்பார்.
அன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் சுழலும் கவியரங்கத் துக்கு கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமை வகிப்பார்.
மாலை 4.30 மணிக்கு தொடங்கும் பட்டிமன்றத்தில் 'வாசகர்களை அதிகம் ஈர்ப்பதில் விஞ்சி நிற்பது கவிதையா? உரை நடையா?' எனும் தலைப்பிலான விவாதத்துக்கு பேராசிரியர், முனைவர் இரா. மோகன் நடுவ ராகச் செயல்படுவார். முனைவர் நிர்மலா மோகன், முனைவர் சரோஜினி செல்லக் கிருஷ்ணன், முனைவர் ஜி. ராஜ கோபாலன், முனைவர் இரத்தின வேங்கடேசன், சுப. அருணா சலம், சேவகன் ஆகியோர் விவாதத்தில் பங்கேற்பார்கள். பின்னர் செப்டம்பர் 24ஆம் தேதியன்று இடம்பெறும் இளையர் அணி நிகழ்ச்சியை முதல் முறையாக சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் மாணவர்கள் ஏற்று நடத்துவார்கள்.
அன்று மாலை 6 மணிக்குத் தொடங்கும் உரையரங்கத்தில் மலேசியாவின் துணையமைச்சர் டத்தோ எம். சரவணன், தமிழக எழுத்தாளர் திரு பாரதி கிருஷ்ண குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்று வார்கள். 25ஆம் தேதி ஞாயிறு காலை 9 மணிக்கு சிறுகதைப் பயிலரங்கு நடைபெறும். தமிழக எழுத்தாளர் திரு பாரதி கிருஷ்ண குமார் அதை வழிநடத்துவார். அன்றிரவு 7 மணிக்கு சிங்கப்பூர் கண்ட்ரி கிளப்பில் நடைபெறும் மாபெரும் விருந்து நிகழ்ச்சியில் துணைப் பிரதமர் தர்மன் சண்முக ரத்னம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்.
மாபெரும் விருந்து நிகழ்ச்சியில் நடிகரும் சிறந்த பேச்சாளருமான திரு சிவகுமார் விருந்தினர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பார். கோப்புப் படம்

