காய்கறிகள், பழங்களைப் பறித்தவுடன் அல்லது வாங்கியவுடன் பயன்படுத்துவதே சாலச் சிறந்தது. அவற்றில் உள்ள சத்துக்களை முழுமையாகப் பெற இதுவே ஏற்ற வழி. ஆனால், பெரும்பாலான சமயங்களில் சமைக்கப் பயன்படும், சமைத்த பொருட்களை குளிர்பதனப் பெட்டியில் வைத்து சில நாட்களுக்குப் பாதுகாக் கிறோம். சில பொருட்களை சிறிது காலம்கூட குளிர்பதனப் பெட்டியில் வைக்கக்கூடாது. அத்தகைய பொருட்களில் சில இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
தக்காளியைக் குளிர்பதனப் பெட்டியில் வைத்தால் மேற்கொண்டு பழுக்காது. அதனால் அதன் மணம் குன்றிவிடும்.
வாழைப்பழங்கள் வெப்பமண்டலப் பகுதியில் பயிராவதால் குளிர்ச்சியான சூழலை எதிர்கொள்ளும் திறன் அவற்றுக்கு இருப்பதில்லை. அதனால் அவற்றை குளிர்பதனப் பெட்டியில் வைத்தால் அவற்றின் தோல் கருத்துப் போவதுடன் பழமும் அதன் இயல்பை இழந்துவிடும்.
பூசணிக்காய், தண்ணீர்ப் பழம், முலாம்பழம் போன்ற 'மெலன்' வகைக் காய், கனிகள் அறை வெப்பநிலையில் இருந்தால் அவற்றில் 'ஆன்டிஆக்சிடண்ட்' அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வெட்டப்படாதவரை அவற்றை குளிர்பதனப் பெட்டிகளில் வைக்க வேண்டியதில்லை.
வெங்காயம், பூண்டு ஆகியவற்றைக் காற்றோட்டமான சூழ லில் வைக்கவேண்டும். குளிர்ச்சி யான சூழலில் வைத்தால் வெங் காயம் விரைவில் கெட்டுப்போகும் வாய்ப்பு உள்ளது. பூண்டை குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் அது பூஞ்சை பிடிக்கும்.
உருளைக்கிழங்குகளை குளிர்சாதனப் பெட்டியில் வைத் தால் அதிலுள்ள 'ஸ்டார்ச்' சர்க்கரையாக வேதிமாற்றம் பெறும். மேலும் அதனைச் சமைத்த பிறகு இனிப்புச் சுவைதரும்.
ரொட்டியை உறைநிலையில் வைத்து தற்காலிகமாகப் பாதுகாக்கலாம். ஆனால், அவற்றைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் அதில் பூஞ்சை பிடிக்கும். மேலும் ரொட்டியில் உள்ள 'ஸ்டார்ச்' விரைவில் கெட்டிப்பட்டு ரொட்டி கடினமாகிவிடும்.
எண்ணெய்யை குளிர்பதனப் பெட்டியில் வைத்தால் அது கெட்டிப்பட்டு சமைக்க ஏற்றதல்லாததாகி விடும்.
காப்பியை குளிர்பதனப் பெட்டியில் வைத்தால் அதன் மணம் குறைவதுடன் குளிர்பதனப் பெட்டியில் உள்ள மற்ற பொருட்களின் மணத்தையும் ஈர்க்கும். குடிக்க ஏற்ற சுவையில் இருக்காது.
அவகாடோவைக் குளிர் சாதனப் பெட்டியில் வைத்தால் அது பழுக்காது. மணம் குன்றும்.
தேன் எப்போதும் கெட்டுப்போகாத உணவுப் பொருள் என்று கூறப்படுகிறது. அப்படி இருக்கையில் அதனை குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டிய அவசியமில்லை. எவ்வளவுதான் சுத்தமான தேனாக இருந்தாலும் மிகவும் குளிர்ந்த வெப்பநிலையில் வைக்கப்படும்போது அதன் தன்மை மாறி இறுகிவிடும்.

