வில்சன் சைலஸ்
குடும்பத்தினரை விட்டு இன்று தீபாவளி கொண்டாடும் வெளி நாட்டு ஊழியர்களைக் கலை நிகழ்ச்சிகளின் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மகிழ்வித்தது வெளிநாட்டு ஊழியர் நிலையம். ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகளுடன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் வெளி நாட்டு ஊழியர்களுக்குப் போதிக்கப்பட்டது. வெளிநாட்டு ஊழியர்களுக் கான 'ஸ்கெல்' மனமகிழ் மன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஏறக்குறைய 5,000 வெளிநாட்டு ஊழியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
கொண்டாட்டத்தின் ஓர் அம்சமாக வெளிநாட்டு ஊழியர் நிலையம் 'எஸ்ஜி' பாதுகாப்பு திட்டத்தை ஊழியர்களிடையே அறிமுகப்படுத்தியது. சிங்கப்பூரில் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்கள் ஆபத்தான சூழல்களில் எவ்வாறு விழிப்புணர்வுடன் செயல்படுவது என்பதை இந்தத் திட்டத்தின் மூலம் அறிவுறுத்திய நிலையம், நான்கு மொழிகளில் அது தொடர்பான பிரசுரங்களை வெளியிட்டது. உள்துறை அமைச்சு, சிங்கப்பூர் போலிஸ் படை, மனிதவள அமைச்சு, சிங்கப்பூர் குடிமை தற்காப்புப் படை ஆகிய அமைப்புகளின் ஆதரவுடன் தமிழ், ஆங்கிலம், சீனம், வங்காளம் ஆகிய மொழிகளில் பாதுகாப்பு குறித்த பிரசுரங்களை வெளிநாட்டு ஊழியர் நிலையம் அச்சிட்டு விநியோகித்தது.

