விக்னேஸ்வரன் சண்முகம்: மிளகு வான்கோழி மசாலா

விக்னேஸ்வரன் சண்முகம்: மிளகு வான்கோழி மசாலா

2 mins read
7205264e-af1c-42c0-96c1-412630b8bee1
-

வில்சன் சைலஸ்

சிறு வயதிலிருந்து தந்தை உருவாக்கிய காயத்ரி உணவகத்தில் பணியாற்றிய அனுபவம் உடையவர் 26 வயது விக்னேஸ்வரன் சண்முகம். உணவகத்தில் சமையல் செய்தபோது ஏற்பட்ட ஆர்வத்தால் 'ஷாட்டெக்' சமையற்கலைப் பள்ளியில் கல்வியை மேற்கொண்ட இவர், தற்போது காயத்ரி உணவகத்தின் நிர்வாக சமையல் வல்லுநராகவும் பொறுப்பு வகிக்கிறார். மூத்த சகோதரரான 28 வயது மகேந்திரனுடன் உணவகத்தின் இயக்குநராகவும் செயல்படும் விக்னேஸ்வரனுக்கு கிறிஸ்மஸ் பண்டிகையின்போது உணவுப் பட்டியலில் புதுவித உணவு வகைகளைச் சேர்ப்பதில் அதிக ஆர்வம் உண்டு. ஆண்டுதோறும் வான்கோழியைக் கொண்டு புதுவித உணவை அறிமுகப்படுத்தி வரும் இவர், இந்தக் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு மிளகு வான்கோழி மசாலாவைச் செய்கிறார்.

தேவையான பொருட்கள்: வான்கோழி - 2 கிலோ

சோம்பு - அரை தேக்கரண்டி

இலவங்கப் பூ - 1

கிராம்பு - 3

ஏலக்காய் - 3

இலவங்கப்பட்டை - 1

பிரியாணி இலை - 2

வெங்காயம் - 250 கிராம்

இஞ்சி பூண்டு விழுது - 100 கிராம்

அரைத்த தக்காளி விழுது - 250 கிராம்

இடித்த கருப்பு மிளகு - 30 கிராம்

மிளகாய்த் தூள் - 40 கிராம்

மஞ்சள் தூள் - 15 கிராம்

கொத்தமல்லித் தூள் - 15 கிராம்

சிவப்பு மிளகாய் - 10 கிராம்

கரம் மசாலா - 5 கிராம்

சீரகப் பொடி - 10 கிராம்

சோம்புப் பொடி - 10 கிராம்

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்துமல்லி இலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை: 1. தோல் நீக்கப்பட்ட வான் கோழியை விருப்பத்திற்கு ஏற்ப துண்டுகளாக வெட்டி தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து 45 முதல் 60 நிமிடங்கள் வரை வேகவைக்கவும்.

2. சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் சோம்பு, இலவங்கப் பூ, கிராம்பு, ஏலக்காய், இலவங்கப் பட்டை, பிரியாணி இலை ஆகிய வற்றுடன் வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

3. அதனுடன் இஞ்சி பூண்டு விழுதையும் அரைத்த தக்காளி விழுதையும் சேர்த்து வதக்கி மிளகு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், சிவப்பு மிளகாய், கரம் மசாலா, சீரகப் பொடி, சோம்புப் பொடி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

4. நன்றாகக் கொதிக்கும் மசாலா வில் வேக வைத்த வான்கோழியைச் சேர்த்துக் கிளறி தேவையான அளவு உப்பு சேர்க்கவும். சுடச்சுட தயாரான மிளகு வான்கோழி மசாலாவின் மீது வறுத்த முந்திரி, கறிவேப்பிலை, மல்லி இலையைத் தூவி பரிமாறலாம். பின்குறிப்பு: வான்கோழிக்குப் பதில் கோழிக்கறியை இதேமுறையில் தயாரிக்கலாம்.

படங்கள்: திமத்தி டேவிட், ஃபோங் வை கியோங்