சக்கர நாற்காலியில் வலம் வந்தாலும் சாதிக்கும் நடனக்குழு

சக்கர நாற்காலியில் வலம் வந்தாலும் சாதிக்கும் நடனக்குழு

2 mins read
2761ab69-e077-43bd-94e5-5f3e05a01a85
-

ப. பாலசுப்பிரமணியம்

உடற்குறை என்பது திறமைக்குத் தடையில்லை என்பதை உலகத் திற்கு உணர்த்தி வருகிறது 'வீ ஆர் ஒன்' எனும் டெல்லியைச் சேர்ந்த நடனக்குழு. துடிப்புமிக்க இளையர்களைக் கொண்டிருக்கும் இந்த நடனக் குழுவில் சக்கர நாற்காலியில் இருந்தவாறே பிரமிக்க வைக்கும் நடன அசைவுகளைக் கலைஞர்கள் வெளிக்காட்டுகின்றனர்.

சக்கர நாற்காலியில் இருந்த வாறே பரதநாட்டியம், யோகா, பாரம்பரிய இந்தியத் தற்காப்புக் கலை எனப் பல்வேறு அம்சங்களை இவர்களது நடனப் படைப்புகள் உள்ளடக்குகின்றன.

இந்த நடனக் குழுவைத் தொடங்கிய 26 வயது ஹுஸ்நேன் தமது இளம் பருவத்தில் சக மாணவர்கள் கிரிக்கெட், காற்பந்து போன்ற விளையாட்டுகளில் மும் முரமாக ஈடுபட்டதை ஏக்கத்துடன் பார்த்ததாகவும் வாழ்க்கையில் எதையுமே சாதிக்க முடியாது என்ற தாழ்வு மனப்பான்மை தமக்குள் எழுந்ததாகவும் கூறினார்.

அப்பருவத்தில் உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணமும் இவருக்கு வந்தது. ஆனால் சாதிக்கத் துணிந்தவர்கள் குறை பாடுகளைப் பற்றி நினைக்காது செயலில் இறங்க வேண்டும் என அவருடைய பள்ளி ஆசிரியர் தைரியம் கொடுத்தார். பள்ளி நடனப் பயிற்சியில் சக்கர நாற்காலியைச் சற்று தூக்கியவாறு சுழற்ற வேண்டும். ஹுஸ்நேன் அதனைச் செய்ய முயன்றபோது சக்கர நாற்காலி யிலிருந்து பின்புறம் விழுந்து தலையைக் காயப்படுத்திக்கொண் டதுதான் மிச்சம். இருப்பினும், அச்சமயம் அவரிடமிருந்த பயம் போனது. தன்னம்பிக்கையுடன் அடுத்த முறை முயன்றார், முயற்சி திருவினையானது.

வெளிநாடுகளுக்குச் சென்று நடனப் படைப்புகளை மேடையேற்ற அவரது பள்ளி மூலம் வாய்ப்புகளும் கிட்டியது. பள்ளிப் பருவம் முடிந்த பிறகு தன்னுடன் படித்த சில நண்பர்களுடன் சேர்ந்து 'வீ ஆர் ஒன்' எனும் நடனக்குழுவை 2013ஆம் ஆண்டில் ஆரம்பித்தார். அதில் கலைத் துறையில் பேரார்வம் கொண்ட செவி, பேச்சு ஆற்றலை இழந்த இளையர்களையும் சேர்த் துக்கொண்டார்.