காதலை வைத்து கம்யூனிச கொள்கை பரப்பு; சீனாவின் மாறுபட்ட முயற்சி

இளையர்களிடம் தனது கொள்கைகளை கொண்டு சேர்க்கும் நோக்கில் புதிய சித்திர நாடகத் தொடரைத் தயாரிக்க சீனாவின் கம்யூனிஸ்டு கட்சி ஏற்பாடு செய்திருக்கிறது.

இளமையாகவும் அழகாகவும் இருக்கும் தத்துவஞானி கார்ல் மார்க்ஸ் இந்த நாடகத் தொடரின் கதாநாயகன். கம்யூனிசத்தைத் தோற்றுவித்தவராகக் கருதப்படும் கார்ல் மார்க்ஸ் பற்றி வழக்கமாக பாடப் புத்தகங்கள் வழியாக அந்நாட்டின் இளம் பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்யப்படும்.

“கார்ல் மார்க்ஸ் தொடர்பான இலக்கிய புத்தகங்கள் நிறைய உள்ளன. ஆனால் அவை, இளையர்களைக் கவரும் விதத்தில் படைக்கப்படுவதில்லை,” என்று நாடகத் தொடரின் எழுத்தாளர்களில் ஒருவரான சுவோ சினா, ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

மார்க்ஸ் மீதான நாட்டத்தை இன்னும் அதிகம் பேரிடம் கொண்டு சேர்ப்பது தமது குழுவினரின் விருப்பம் என்று திருவாட்டி சுவோ கூறினார்.  வாவாயு உயிரோவிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்நாடகத் தொடர், சீனாவின் மத்திய கொள்கை பரப்புத்துறையின் ஆதரவைப் பெற்றுள்ளது. 

மார்க்ஸ், லெனின் உள்ளிட்ட கம்யூனிஸ்டு சித்தாந்தங்கள் இளம் மாணவர்களுக்குப் போதிக்கப்படுகின்றன. பொதுத்துறை ஊழியர்கள் மார்க்ஸிய கொள்கைகளைப் பற்றிப் படித்து அவையொட்டிய தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால்தான் அவர்களால் பதவி உயர்வு பெற முடியும்.

மார்க்சிய இலக்கிய நூல்களைப் படிப்பது ஒரு வாழ்வியல் முறை என்றும் ஆன்மிகப் பயணம் என்றும் சீன அதிபர் ஸி ஜின்பிங் தெரிவித்தார். இத்தகைய நூல்களை வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளவும் அவர் தமது கட்சி உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.