பொக்கிமோன் நிறுவனம் தூக்கத்தை மையப்படுத்தும் ஒரு விளையாட்டுச் செயலியை வெளியிடவுள்ளது. ‘பொக்கிமோன் ஸ்லீப்’ என்பது இந்த விளையாட்டின் பெயர். திறன்பேசி விளையாட்டுச் செயலியான அது அடுத்த ஆண்டு வெளியீடு காணவுள்ளது.
2016ஆம் ஆண்டில் பொக்கிமோன் நிறுவனம் வெளியிட்ட ‘பொக்கிமோன் கோ’ பிரபலத்தின் உச்சத்தை எட்டியது. மெய்நிகர்த் தொழில்நுட்பக் கூறுகளைக் கொண்டுள்ள அந்த விளையாட்டைப் பலர் தங்கள் உண்மை வாழ்க்கையிலுள்ள பல்வேறு இடங்களுக்குச் சென்று விளையாடுவர்.
புதிய ‘பொக்கிமோன் ஸ்லீப்’ விளையாட்டு, அதனை விளையாடுபவர்களின் தூக்கத்தைக் கண்காணித்து அது தொடர்பான தகவல்களைப் பதிவு செய்கிறது. நன்றாகத் தூங்குபவர்களுக்கு மதிப்புப் புள்ளிகளை வழங்கும் இந்த விளையாட்டு, நல்ல உறக்கத்தை ஊக்குவிப்பதாகக் கூறப்படுகிறது.