தேசிய அளவிலான பரதநாட்டியப் போட்டி

தோ பாயோ மேற்கு சமூகமன்ற இந்தியர் நற்பணி செயற்குழுவின் ஏற்பாட்டில் தேசிய அளவில் பரத நாட்டியப் போட்டி நடத்தப்பட்டது. 12 வயதுக்குட்பட்டோர் (தொடக்கநிலை), 13 முதல் 17 வயதுக்குட்பட்டோர் (இடைநிலை), 18 முதல் 25 வயதுக்குட்பட்டோர் (உயர்நிலை) என மூன்று பிரிவுகளில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன.

வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கேடயமும் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன.
இவ்வாண்டு போட்டிகளில் 81 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில் 20 பேர் இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். போட்டியின் இறுதிச்சுற்று கடந்த மாதம் 27ஆம் தேதி மாலை பீட்டி உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

போட்டியைக் காண சுமார் 400 பார்வையாளர்கள் வந்திருந்தனர். 12 வயதுக்குட்பட்ட தொடக்கநிலை மாணவர்களுக்கான பிரிவில் அபிராமி ராம்நாராயண் முதல் பரிசையும் ரித்திகா சுரேஷ்குமார், பி.என். காவியா ஆகியோர் முறையே இரண்டாம், மூன்றாம் பரிசுகளையும் வென்றனர்.

இடைநிலைப் பிரிவில் கல்யாணி ஹேமா நாயர், ஷ்ரேயா மூர்த்தி, தியா மகேஷ் ஆகியோர் முறையே முதல், இரண்டாவது, மூன்றாவது பரிசுகளை வென்றனர். உயர்நிலைப் பிரிவில் ஜானகி நாயர், சுவேதா ஜெயபால், விஷ்ணுசரன் நாயுடு ஆகியோர் முறையே முதல், இரண்டாவது, மூன்றாவது பரிசுகளை வென்றனர்.

இறுதிப் போட்டியைப் பார்வையிட்ட வர்த்தகம், தொழில் மற்றும் கல்வி மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட், வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.
ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளி, பீட்டி உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளும் நிகழ்வுக்கு சிறப்புச் சேர்த்தன.

இந்திய பாரம்பரிய நடனமான பரதநாட்டியக் கலையை சிங்கையில் உயிர்ப்புடன் வைத்திருக்கும் விதத்தில் தேசிய அளவிலான இந்தப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர்.