எழுத்தார்வத்தை வளர்க்கும் தங்கமுனைப் பேனா விருது

தேசிய அளவில் நான்கு மொழி களிலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ‘தங்கமுனைப் பேனா’ (கோல்டன் பாயிண்ட்) விருதுப் போட்டி மீண்டும் வந்துவிட்டது. தமிழ், ஆங்கிலம், சீனம், மலாய் நான்கு மொழிகளிலும் சிறுகதை, கவிதை என இரு பிரிவுகளில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.

புதிய எழுத்தாளர்களை அடை யாளம் கண்டு ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நடத்தப்படும் இந்தப் போட்டியில் எழுத்தார்வம் உள்ளவர்கள் பங்கேற்கலாம்.  சுவையான கதைகளும் வெளியிடப்படாத கவிதைகளும் உங்களிடம் இருந்தால், இந்த தேசிய அளவிலான போட்டிக்கு அனுப்பிவையுங்கள். இப்போட்டி பல நல்ல எழுத்தாளர்களை அடை யாளம் கண்டு உருவாக்கியுள்ளது.

தேசிய கலைகள் மன்றம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தும் தேசிய அளவிலான  இந்த நான்கு மொழி எழுத்துப் போட்டி, 1993ஆம் ஆண்டு முதல் ‘கோல்டன் பாயிண்ட்’ என்ற பெயரில்  நடத்தப்பட்டு வருகிறது. 

போட்டி விதிமுறைகள்

இதுவரை நூல்கள் வெளியிடாத சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசி களும் மட்டுமே இப்போட்டியில் பங்கேற்க முடியும். கவிதை, சிறுகதை இரு பிரிவிலும் ஒருவர் கலந்து கொள்ளலாம்.  சிறுகதை  5,000 சொற்களுக்கு மேற்போகாமல் இருக்க வேண்டும்.

கவிதைப் போட்டிக்குக் குறைந்தது ஐந்து முதல் எட்டுக் கவிதைகள் வரை அனுப்பலாம். பங்கேற்க விரும்புபவர்களின் படைப்புகள் பத்திரிகை, சஞ்சிகை, தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கலாம். ஆனால் நூல் வெளியிட்டிருக்கக்கூடாது. தங்க முனைப் பேனா விருதில் முந்தைய ஆண்டுகளில் பங்கேற்று முதல் பரிசு பெற்றவர்கள், குறிப்பிட்ட அதே பிரிவில் மீண்டும் பங்கேற்க முடியாது.

பரிசுகள்

நான்கு மொழிகளுக்கும் கவிதை, சிறுகதை இரு பிரிவிலும் தனித்தனியாகப் பரிசு வழங்கப்படும்.

முதல் பரிசு: $4,000 ரொக்கம், $6,000 மதிப்புள்ள மானியம்.

இரண்டாம் பரிசு: $3,000 ரொக்கம், சான்றிதழ்.

மூன்றாம் பரிசு: $2,000 ரொக்கம், சான்றிதழ்.

இந்தப் பரிசுகள் அளிக்கப் படாதபட்சத்தில் தேர்வுபெறும் படைப்புக்கு $500 ஆறுதல் பரிசு வழங்கப்படும். அத்துடன் ஒவ்வொரு பிரிவிலும் அடையாளம் காணப்படும் மூன்று படைப்புகளுக்குச் சான்றிதழ்கள் அளிக்கப்படும்.

விண்ணப்பப் படிவங்களைப் பெறவும் போட்டி விதிமுறைகள் குறித்த மேல் விவரங்களுக்கும் https://www.nac.gov.sg/events/golden-point-award.html எனும் இணையத் தளத்தைப் பார்க்கவும்.

படைப்புகளை இணையம் வழியாக அனுப்பி வைக்கவேண்டிய இறுதி நாள்: 26/08/2019.