அனைத்துலக இந்திய விற்பனைத் திருவிழா

‘எஸ்ஐஐ எக்ஸ்போ’ எனப்படும் சிங்கப்பூர் அனைத்துலக இந்திய விற்பனைத் திருவிழாவில் 120க்கும் அதிகமான விற்பனையாளர்கள் திரளவிருக்கின்றனர். உணவு, ஆபரணங்கள், கைவினைப்பொருட்கள், மளிகைப்பொருட்கள், ஆயுர்வேத மருந்துப்பொருட்கள் உள்ளிட்டவை இந்தத் திருவிழாவுக்காகச் சிறப்பாகத் தருவிக்கப்பட்டுள்ளன.

‘சன்டெக் சிங்கப்பூர்’ அனைத்துலக மாநாடு மற்றும் கண்காட்சி அரங்கத்தில் இம்மாதம் 12 ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெறும்.

இவ்வாண்டின் திருவிழாவில்  ‘தி கிரேட் இந்தியன் புக் லாஞ்ச்’ என்ற புத்தக விற்பனை அங்கம் முதன்முறையாக இடம்பெறவுள்ளது. இலக்கியம், அறிவியல், மருத்துவம், மேலாண்மை உள்ளிட்ட நூல்கள் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டு இங்கு விற்பனை செய்யப்படும்.

200 வெள்ளிக்கு மேல் புத்தகங்களை வாங்கி தங்கள் வீடுகளில் நூலகம் அமைக்க முயலும் சிறார்களுக்கு “எதிர்கால சாதனையாளர்” விருது வழங்கப்படும் என்று புத்தகக் கண்காட்சியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், முதியோருக்குச் சிறப்பு விலைக்கழிவுகளும் கொடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

‘சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ்’ குழுமத்தைச் சேர்ந்த ‘தமிழ் முரசு’, ‘தபலா’ ஆகிய இதழ்களுடன் ‘டி ஐடியர்ஸ்’ என்ற நிகழ்ச்சி நிர்வாக நிறுவனம் இணைந்து இந்தத் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் சம்மேளனம் இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்குகிறது.