சுடச் சுடச் செய்திகள்

அமெரிக்கக் கலைக்கூடத்தில் தமிழ்ப் பெண்ணின் உருவப்படம்

பெப்சிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் இந்திரா நூயியின் உருவப்படம் அமெரிக்காவின் தேசிய உருவப்படக் கலைக்கூடத்தில் பொருத்தப்பட்டுள்ளது.   2006ஆம் ஆண்டில் பெப்சிகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்ற திருமதி நூயி, கடந்தாண்டு அந்தப் பதவியிலிருந்து வெளியேறினார்.  சென்னையில் தமிழ் பேசும் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அவர், அறிவியல் இளநிலைப் பட்டத்தைப் பெற்ற பின்னர் யேல் நிர்வாகப் பள்ளியில் சேர்ந்தார்.

பெப்சிகோ நிறுவனத்தின் தலைவர் பதவியைவிட்டு வெளியேறியது பற்றி வருத்தப்பட்டதே இல்லை என்று கூறிய திருமதி நூயி, இனி தலைவர்களை, குறிப்பாகப் பெண் தலைவர்களை  உருவாக்குவதில் கவனம் செலுத்தப்போவதாகத் தெரிவித்தார்.

“பெண்களுக்கிடையே சகோதரத்துவ உணர்வு தேவைப்படுகிறது,” என்று திருமதி நூயி தெரிவித்தார். பெண்களுக்கு எதிரான மனப்போக்கைப் பற்றி பேசுவது மட்டுமல்லாமல் செயலில் இறங்குவது முக்கியம் என்றும் அவர் கூறினார்.

தாம் கடந்து வந்த பாதை மிகவும் கரடு முரடானது என்று கூறிய அவர், தாம் கற்றுக்கொண்ட பாடங்களின்மூலம் வருங்காலத் தலைவர்கள் பயனடைய விரும்புகிறார். 

“பெண்ணாகவும், வெள்ளைக்கார இனத்தில் அல்லாத மாநிறத்தோல் உள்ளவராகவும் இருந்து, ஒரு பெரிய நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றி, அந்த நிறுவனத்தை உருமாற்ற முயலும்போது குறைகூறுபவர்கள் பல பேர் இருப்பர்,” என்றார் திருமதி நூயி.

சிங்கப்பூரின் ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு மண்டபத்தில் இன்று இறுதி நாளாக நடைபெறும் ஆசிய பெண்கள் மாநாட்டில் திருமதி நூயி, பல்வேறு பெண் வர்த்தகத் தலைவர்களுடன், பேச்சாளராகக் கலந்துகொண்டார்.