கோலாகல குருப்பெயர்ச்சி

கோலாகல குருப்பெயர்ச்சி

1 mins read
a402f12a-8ece-4e20-b2a1-af91c3bd1e8a
ஆலங்குடி, குருவித்துறை ஆகிய தலங்களில் உள்ள குருபகவான் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. படம்: ஊடகம் -

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி குருபகவான் இன்று (அக்டோபர் 29) அதிகாலை 3.49 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பிரவேசம் செய்ததை முன்னிட்டு சிங்கப்பூரிலும் தமிழகத்திலும் பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன.

சிவாலயங்களில் குருவுக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் பரிகார ஹோமங்கள் நடைபெற்றன. குரு பரிகாரத் தலங்களில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் பங்கேற்றனர்.

சிங்கப்பூரிலுள்ள பல ஆலயங்களில் குருப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன. அவற்றில் மக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடியில், ஆபத்சகாயேஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது. நவக்கிரக தலங்களில் குருபகவானுக்கு உரிய பரிகாரத் தலமாகப் போற்றப்படும் இக்கோவில் குருபகவான் கோவில் என்று அழைக்கப்படுகிறது.

இக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. குருபகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே அமைந்துள்ள குருவித்துறையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராய் வீற்றிருக்கும் அருள்மிகு சித்திரரத வல்லப பெருமாள் திருக்கோவிலில் சுயம்புவாக வீற்றிருக்கும் குருபகவான் சன்னதியில் குருப்பெயர்ச்சி விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

குருவித்துறையில் குருபகவானுக்குக் கடந்த நான்கு நாட்களாக லட்சார்ச்சனை நடைபெற்றது. இன்று பரிஹார மஹாயாகம், மஹாபூர்ணஹூதி மற்றும் திருமஞ்சன சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அந்தப் பகுதி மக்கள் பெருவாரியாக இந்த வழிபாடுகளில் கலந்துகொண்டனர்.