‘சிங்கப்பூர் 200ஆம் ஆண்டில் மக்கள் கவிஞரின் சிந்தனைகள்’

மக்கள் கவிஞர் மன்றத்தின் 60வது நினைவு நாளில் ‘சிங்கப்பூர் 200ஆம் ஆண்டில் மக்கள் கவிஞரின் சிந்தனைகள்’  என்ற கருத்தரங்கம் கடந்த 12ஆம் தேதி மாலை தேசிய நூலகத்தில் நடந்தது. 

நிகழ்ச்சியில், சொற்பொழி வாற்றிய மாணவி சரண்யா முஸிலா, “மாணவர்களாக நாம் காண்கின்ற கனவுகள் நினைவாக படிப்பு தேவை. அதோடு உழைப்பும் தேவை என்ற  மக்கள் கவிஞர் வரிகளைப் பின்பற்ற வேண்டும்,” என்று கூறினார். 

இந்த கருத்தரங்கத்தின் தலைவரான திரு மன்னை ராசகோபால் கூறுகையில்,  “மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார் தனது பாட்டினைக்கொண்டு சமூக கேட்டினை சாடியவர் மட்டு மல்ல. மக்களின் எழுச்சிக்காகவும் வாழ்வின் மீட்சிக்காகவும் பாடிய இவரது பாடல் வரிகளில் உள்ள பல பரிமாணங்களை நமது சிங்கை வாழ்வியலோடு பொருத்திப் பார்க்க மாணவர்கள் தயாராய் உள்ளனர்,” என்றார்.

தொடர்ந்து  கவித்திறன் , கற்பனை வளம், கருத்தாழம்,  சொல்நயம், பாடுபொருள்  உள்ளிட்ட ஆறு தலைப்புகளிலும் செல்வம் லாவண்யா, ஐஸ்வர்யா பாலாஜி, கண்ணன் வைஷ்ணவி லட்சுமி, வேணுகோபால் ராஜ்குமார், நசீமா பேகம் சர்புதீன், மோகன் ஹரிவர்த்னி யாவரும் பாடியதும் பேசியதும்  சிறப்பாக அமைந்தது. 

சிறப்பு விருந்தினரான  நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் இரா. தினகரன், கிராமத்தில் பிறந்த மக்கள் கவிஞர் உழவுத் தொழிலோடு 10க்கும் மேற்பட்ட தொழில்கள் செய்தவர். அவரது தந்தையைப் போலவே இயல்பான கவிதைத்திறனைக் கொண்டவர் என்றும் கூறினார்.