கவியரசு கண்ணதாசன் விழா

பாரதி, பாரதிதாசனுக்குப் பிறகு இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞராகத் திகழ்ந்த கவியரசு கண்ணதாசன் இலக்கியத்தின் அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்தவர். அவர் நினைவாக சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம், 21ஆவது கவியரசு கண்ணதாசன் விழாவை இம்மாதம் 16ஆம் தேதி சனிக்கிழமை மாலை, டேங் ரோட்டிலுள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ளது.

தமிழர் பேரவையின் தலைவர் திரு. வெ. பாண்டியன் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். சிறந்த நகைச்சுவை, இலக்கிய, ஆன்மீகப் பேச்சாளரும் பல பட்டி மன்றங்களில் பேசி அனுபவம் பெற்றவருமான நகைச்சுவை நாவரசர் புலவர் மா. இராமலிங்கம் (படம்) ‘காலத்தை வென்ற கவியரசர்’ எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றவுள்ளார். கண்ணதாசன் விழாவை ஒட்டி இவ்வாண்டும் 40 வயதிற்கு கீழ்ப்பட்ட ஒருவருக்கு கண்ணதாசன் விருது வழங்கப்படும். கவியரசு கண்ணதாசன் விழாவை ஒட்டி கண்ணதாசன் பாட்டுத்திறன் போட்டி இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது. போட்டியின் இறுதிச் சுற்று விழாவின்போது நடைபெறும்.