ஈப்போ உலகத் தமிழ்க் கவிதை மாநாட்டில் சிங்கப்பூரர்களுக்கு சிறப்பு

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முன்னாள் தலைவரும் இந்நாள் துணைத் தலைவருமான திரு நா. ஆண்டியப்பனுக்கு மலேசி யாவின் பேராக் மாநிலத் தலைநகர் ஈப்போவில் நடைபெற்ற 2ஆம் உலகத் தமிழ்க் கவிதை மாநாட்டில் ‘தமிழ்ப் பேரொளி’ விருது வழங்கப்பட்டது. 

இம்மாதம் 9, 10 தேதிகளில் ஈப்போவில் 2ஆம் உலகத் தமிழ்க் கவிதை மாநாடு, அந்நகரில் செயல்படும் முத்தமிழ் பாவலர் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. 

மலேசியா, சிங்கப்பூர், இந்தியா, இலங்கை, மியன்மார் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுமார் 200 பேராளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

உலகத் தமிழ்க் கவிஞர் களுக்கிடையே ஓர் உறவுப் பாலத்தை ஏற்படுத்துதல்; இளைஞர்களுக்கு கவிதைகள் குறித்து விழிப்புணர்ச்சியையும் எழுதும் ஆர்வத்தையும் தூண்டச் செய்தல்; அறிவியல் தமிழை ஊக்குவித்தல்; மரபுக் கவிதைகளின் நிலைப்பாட்டை உறுதி செய்யவும் அவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதற்கான வழி வகைகளைக் கண்டறியும்  நோக்கங்களை முன்வைத்து இக்கவிதை மாநாடு நடத்தப்பட்டது. 

கவியரங்கம், ஆய்வரங்கம், கலந்துரையாடல், பட்டிமன்றம், இலக்கியச் சொற்பொழிவு என பல்வேறு அங்கங்களுடன் இந்த இரண்டு நாள் மாநாடு நடத்தப் பட்டது. 

மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் திரு சிவனேசன், தமிழ்நாட்டிற்கு அடுத்து அதிகமான தமிழ்ப் பள்ளிகள் பேரா மாநிலத்தில்தான் இருக்கின்றன என்று தெரிவித்தார். 

பேராக் மாநிலத்தில் அறிவிப்புப் பலகைகளும் பெயர்ப் பலகைகளும் நான்கு மொழிகளிலும் இடம்பெறுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுவதாக திரு சிவனேசன் குறிப்பிட்டார்.

கவியருவி அப்துல் காதர் தலைமையில் மறுநாள் நடைபெற்ற கவி யரங்கில் தமிழக, மலேசிய, சிங்கப்பூர் கவிஞர்கள் பங்கேற்று கவிதை படைத்தனர்.

சிங்கப்பூர் சார்பில் மூத்த           கவிஞர் பாத்தேறல் இளமாறனும்  எழுத்தாளர் நா. ஆண்டியப்பனும் கவிதைகள் படைத்தனர்.