ஆடல் பாடல் நகைச்சுவை கலந்த ‘கலை ஓவியம் 2020’

நம் நாட்டுக் கலைஞர்களின் ஒருமித்த ஈடுபாட்டுடன் ஆடல் பாடல் நகைச்சுவை எனப் பல்சுவை கலைப்படைப்புகளைத் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியாக ‘கலை ஓவியம் 2020’ நடைபெற்றது. 

புத்தாக்க இந்தியக் கலையகம் ஏற்பாட்டில் கடந்த மாதம் 22ம் தேதி சிஎஸ்சி டெசன்சன் அரங்கில் நடைபெற்றது. புத்தாக்க இந்தியக் கலையகத்தின் தலைவரான சி.குணசேகரன் மற்ற கலைஞர் களுடன் இணைந்து 1960 முதல் இன்றைய நாள் வரை நினைவை விட்டு அகலாத பாடல்களுக்குக் கணினி ஆக்கத்துடன் உயிரூட்டினார்.

மாமியார்-மருமகள்-பேத்தி என நகைச்சுவை நாடகப் பாணியில் கலையரசி, முத்துலட்சுமி, கீர்த்தனா ஆகியோர் படைத்த அங்கங்கள் பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைந்தன. 

கிட்டத்தட்ட 50 ஆண்டு களுக்கு மேலாக வானொலி, தொலைக்காட்சி, மேடைகளில் தனி முத்திரை படைத்து, தற்போதைய இணைய உலகில் 89 வயதில் தமிழை மின்னிலக்கத்தில் எழுதி அனைவருக்கும் முன்னுதாரணமாகத் திகழும் திரு ஏ.பி. ராமன் ‘இணையப் படைப்புலக மயன்’ விருதைப் பெற்றார். 77 வயதில் சுறுசுறுப்புடன், இசைத்துறையில் பணியாற்றி வரும் பாடகி திருமதி லட்சுமி சந்திரன் ‘வாழ்நாள் கலைச் சாதனையாளர்’ விருது பெற்றார்.