சிபு: உறவுகொள்ளும்போது ஆணோ பெண்ணோ அணிந்துகொள்ளக்கூடிய காப்புறையை உலகிலேயே முதன்முதலாக உருவாக்கி இருக்கிறார் மலேசியாவைச் சேர்ந்த மகப்பேற்று மருத்துவர் ஒருவர்.
'வொண்டலீஃப் யூனிசெக்ஸ் காண்டம்' எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தக் காப்புறை, பாலியல் நலத்தைச் சிறப்பாகப் பேண இருபாலார்க்கும் உதவும் என்கிறார் அதன் கண்டுபிடிப்பாளரான டாக்டர் ஜான் டாங் இங் சின்.
"அடிப்படையில், மேற்பரப்பில் ஒட்டுப்பசையுடன் கூடிய வழக்கமான காப்புறைதான் இது," என்றார்' 'டுவின் கேட்டலிஸ்ட்' எனும் மருந்துப்பொருள் விநியோக நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் டாங்.
அது பெண்ணுறுப்பில் அல்லது ஆணுறுப்பில் ஒட்டிக்கொள்வதுடன் கூடுதல் பாதுகாப்பையும் வழங்கும் என்று அவர் சொன்னார்.
காப்புறையின் ஒருபக்கம் மட்டுமே அந்த ஒட்டுப்பசை இருக்கும் என்பதால், அதை உள் அல்லது வெளிப்பக்கமாகத் திருப்பி ஆணோ பெண்ணோ பயன்படுத்தலாம்.
இரு வொண்டலீஃப் காப்புறைகள் கொண்ட ஒரு பெட்டியின் விலை 14.99 மலேசிய ரிங்கிட் (S$4.87). மலேசியாவில் 12 வொண்டலீஃப் காப்புறைகளின் விலை சராசரியாக 20 முதல் 40 ரிங்கிட்.
ஒளிபுகும் தன்மையிலான காயக் கட்டுத்துணி தயாரிக்கப் பயன்படுத்தப்ப்டும் பாலியூரத்தீன் எனும் வேதிப்பொருளால் இது உருவாக்கப்பட்டுள்ளது. அப்பொருள் மென்மையானது, நெகிழ்வுத்தமையுடன் கூடியது என்றாலும் வலுவானது, நீர்புகாத்தன்மை கொண்டது என்றார் டாக்டர் டாங்.
இவ்வாண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து 'டுவின் கேட்டலிஸ்ட்' நிறுவனத்தின் இணையத்தளம் வாயிலாக அவற்றைப் பெற முடியும் என்று டாக்ட்ர் டாங் தெரிவித்துள்ளார்.

