அன்டார்க்டிகா என்று எவரேனும் சொன்னால், முடிவின்றி காணப்படும் பனிப்படலங்களும் அழகான பெங்குவின் பறவைகளுமே நம் கண்முன் வரும்.
அங்கு வேறு ஏதேனும் நிகழக்கூடும் என்று கற்பனை செய்து பார்ப்பதே கடினம்.
உறைந்த பனிப்பகுதியான அன்டார்க்டிகா கண்டத்தில் மிக மிகச் சிறிய அளவிற்கே தாவரங்களும் விலங்குகளும் உள்ளன.
அங்கு காடுகள் பற்றியெரிய, டைனசோர்கள் நடமாடியதை, அந்தப் பனிப்பகுதியில் எரிமலை கக்கியதை நம்மால் நினைத்துப் பார்க்க இயலுமா?
ஆனால், அந்தக் கண்டத்தில் 75 மில்லியன் ஆண்டுகளுக்கு இவையெல்லாம் நடந்திருக்கின்றன என்று அறிவியல் வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
66 முதல் 100 மில்லியன் ஆண்டுகளுக்குமுன் மிக வெப்பமான காலகட்டம் ஒன்றை நாம் வாழும் புவி கடந்து வந்துள்ளது.
அதாவது, அப்போது இங்கு தாவரங்கள் வளர மிகுதியான இடம் இருந்தது. அதனால், காட்டுத்தீயும் ஏற்பட்டது. அந்தக் காலகட்டமும் உலகை டைனசோர்கள் ஆதிக்கம் செலுத்திய காலமும் ஒத்துப்போவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அன்டார்க்டிகாவில் காட்டுத்தீ ஏற்பட்டதற்கான சான்றுகளை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பிரேசிலின் பெர்னாம்புக்கோ கூட்டாண்மைப் பல்கலைக்கழகத்தின் தலைமையிலான அனைத்துலக ஆய்வாளர்கள் குழு, வெகுகாலத்திற்குமுன் பேரளவில் காட்டுத்தீ ஏற்பட்டதற்கான புதைபடிமங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
ஆறாண்டுகளுக்கு முன்பே அன்டார்க்டிகாவில் அடிக்கடி காட்டுத்தீ ஏற்பட்டதற்கான கருத்தியல் கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில், கரிம எச்சங்களுடன் கூடிய புதைபடிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அதற்கு ஒரு சிறிய சான்றாக அமைந்துள்ளது.
அன்டார்க்டிகாவில் காட்டுத்தீ ஏற்பட்டதற்கு அறிவியல் வல்லுநர்கள் இன்னொரு வியப்பான காரணத்தையும் கூறுகின்றனர்.
எரிமலை வெடிப்பின் காரணமாக அங்கு அடிக்கடி காட்டுத்தீ ஏற்பட்டிருக்கலாம் என்பதே அது!

