கடைக்குச் சென்று விரும்பிய பொருள்களை வாங்குவதில் பலருக்கும் ஓர் அலாதி இன்பம்தான். அதிலும், அண்மைய காலமாக பொருள் வாங்கும் முறை மேலும் எளிதாகிவிட்டது.
பிடித்தமான கடைக்கு நேரடியாகச் செல்லாமல் அதன் இணையத்தளத்தை நாடி, ஒருசில பொருள்களைத் தெரிவுசெய்து, ஒரு 'கிளிக்' செய்துவிட்டால் மறுநாளே அப்பொருள்கள் வீட்டு வாசலில் நிற்கும்.
கொவிட்-19 சூழலால் பலரும் வெளியே காலடி எடுத்து வைக்காமலே வீட்டில் இருந்தவாறு வேலை செய்துகொண்டும் பொழுதைக் கழித்துக்கொண்டும் இருக்கும் போக்கு, இணைய வர்த்தகத் துறைக்குப் பெரும் வரவேற்புதான்.
இருப்பினும், சற்றும் யோசிக்காமல் ஒரு பொருளைப் பார்த்தவுடன் வாங்கும் தன்மையுடையவர்கள், தங்களை அதிகளவு கட்டுப்படுத்திக்கொள்ளாவிட்டால் பணம் விரயமாவது நிச்சயம்.
இணைய வர்த்தகத்திற்கு வரவேற்பு
சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 3.3 மில்லியன் பேர் இணைய வர்த்தகச் சந்தையை நாடுகின்றனர்.
இம்மாதம் 5ஆம் தேதியன்று சிங்கப்பூர் புள்ளிவிவரத் துறை வெளியிட்ட அதன் அறிக்கையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கான ஒட்டுமொத்த சில்லறை வர்த்தக விற்பனை மதிப்பு $3.7 மில்லியன் என்று குறிப்பிடப்பட்டது. இதில் இணையம் வழி செய்யப்பட்ட சில்லறை வர்த்தக விற்பனையின் மதிப்பு 16.9%.
இதற்குக் கடந்த ஆண்டு இறுதியில் 'சிங்கல்ஸ் டே', 'பிளாக் ஃபிரைடே', போன்ற மாபெரும் விற்பனை நிகழ்வுகள் பெரும் பங்காற்றியதாகவும் புள்ளிவிவரத் துறை குறிப்பிட்டிருந்தது.
உணர்ச்சிகளைத் தூண்டும் தன்மை
கொவிட்-19 கிருமித்தொற்றால் ஒவ்வொருவர் வாழ்விலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், சில நேரங்களில் ஆரோக்கியமற்றதாக உருவெடுக்கக்கூடும்.
மன அழுத்தம், கவலை, தனிமை போன்ற உணர்வுகளுடன் போராடும் சிலர், பொருள் வாங்குவதன் வழி ஆறுதல் அடைந்துகொள்வர்.
மதுபானம், உணவகங்கள், வெளிநாட்டுப் பயணங்கள் என அதிகம் செலவழிக்க முடியாத சூழலில், இணையத்தளங்களை நாடி மக்கள் தேவையற்ற பொருள்களை வாங்கிச் செலவழிப்பதும் உண்டு.
பொருள்களைத் தாங்கும் பொட்டலங்கள் தங்களின் வீட்டு வாசலை அடைவதில்கூட சிலருக்கு ஒருவித உற்சாக உணர்வு ஏற்படும்.
"இணையம் வழி பொருள் வாங்கும்போதெல்லாம் வாடிக்கையாளருக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது. இதனாலேயே இணையம் வழி பொருள் வாங்கும் பழக்கத்திற்குப் பலரும் அடிமையாகின்றனர்," என்று அமெரிக்காவின் 'லைஃப்பிரிஜ் ஹெல்த்' தலைமை உளவியல் நிபுணர் குலோயி கிரீன்பொம் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்வமா? அடிமையா?
இணையம் வழி பொருள் வாங்கும் பழக்கத்தை ஒருவரால் நிறுத்தமுடியாத நிலையில், அதற்கு அவர் அடிமையாகி இருக்கலாம்.
இதற்கு முதலில் இரண்டு கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்.
ஒன்று, பொருள் வாங்குவதை நிறுத்த முயற்சி செய்தும் என்னால் நிறுத்த முடியாமல் போகிறதா என்பதைக் கேட்டுக்கொள்ள வேண்டும்.
பொருள் வாங்கும் பழக்கத்தால் நமக்கு வெட்கமோ குற்றவுணர்வோ ஏற்படுகிறதா என்பதே நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய மற்றொரு கேள்வி.
இவ்விரண்டு கேள்விகளுக்கும் 'ஆமாம்' என்று நீங்கள் பதிலளித்திருந்தால், சிக்கல் இருக்கலாம் என்று கிரீன்பொம் கூறி உள்ளார்.
பழக்கத்திலிருந்து விடுபடும் வழிகள்
எந்த ஒரு பழக்கத்திற்கும் நீங்கள் அடிமையானால், அதிலிருந்து விடுபடும் பயணம் சவால்மிக்கதாக இருக்கும். தான் ஏன் அளவுக்கு அதிகமாக இணையத்தில் பொருள் வாங்குகிறேன் என்ற கேள்வியை ஒருவர் கேட்டுக்கொண்டால், அதற்கான மூல காரணத்தைக் கண்டறியலாம்.
இது மன அழுத்தம், கவலை, வேலை அல்லது உறவுகளில் திருப்தியின்மை போன்ற உணர்வுகளால் ஏற்பட்டிருக்கலாம்.
நிபுணர்களின் உதவியின்றி அளவுக்கு அதிகமாகப் பொருள் வாங்கும் பழக்கத்தைக் களைந்தெறிவது கடினம் என்றாலும், தனிப்பட்ட முறையில் நாம் ஒரு சில முயற்சிகளை எடுக்க முடியும்.
உங்களுக்கு உற்சாகம் தரும் வேறொரு பயனுள்ள நடவடிக்கையைக் கண்டுபிடியுங்கள். இணையத்தில் பொருள் வாங்குவதற்குப் பதிலாக அந்த நடவடிக்கையில் ஈடுபடுங்கள்.
பொருள் வாங்கும் முன் ஒரு பட்டியலைத் தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள். இது எனக்குத் தேவையா? இந்தப் பொருளைப் போலவே வேறு பொருள் என்னிடம் உள்ளதா? இந்தப் பொருளை நான் ஏன் வாங்க வேண்டும்? என்ற கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்.
மின்னஞ்சல் வழியாக ஒருசில சில்லறை வர்த்தகங்கள் உங்களை குறிவைத்து விளம்பரங்களை அனுப்பக்கூடும். அந்த மின்னஞ்சல்களைப் பெறாதவாறு தடை செய்துவிடுங்கள்.
மின்னிலக்கச் சாதனங்களைப் பயன்படுத்தும்வரை இணையத்தில் பொருள் வாங்கும் சாத்தியம் அதிகம் இருக்கவே செய்யும். சாதனங்களைச் சற்று நேரம் விலக்கி வையுங்களேன்.
இணையம் வழியாகச் செய்யப்படும் செலவுகளை ஒன்றுவிடாமல் குறித்துவைத்துக்கொள்ளுங்கள். எதில் செலவு செய்தோம் என்று மீண்டும் ஆராயும்போது, உங்களின் பழக்கத்தைப் பற்றிய நன்மை, தீமைகளை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.
உடனே இணையம் வழி பொருள் வாங்குவதை நிறுத்திவிடாமல், இதற்கென ஒரு தொகையை ஒதுக்கி வையுங்கள். இதன் வழி எது தேவை, எது விருப்பம் என்பதை நீங்கள் அடையாளம் காணலாம்.
பொருள்களைத் தெரிவு செய்தபின் உடனே 'கிளிக்'ஐ தட்டிவிடாதீர்கள். மூன்று நாள்கள் முதல் ஒரு வாரம் வரை பொறுத்திருந்து, அந்தப் பொருள்கள் அவசியமா என்பதை நன்கு ஆலோசித்து முடிவெடுங்கள்.
தகவல்கள்: இணையம், படங்கள்:
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், ராய்ட்டர்ஸ்

