ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது உடல்நலத்திற்குப் பெரும் கேடு விளைவிக்கும். நீண்ட நேரம் அமர்ந்தே இருப்பது நீரிழிவு, உடற்பருமன், புற்றுநோய் போன்ற நோய்களை ஏற்படுத்திவிடும் என்று ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ கேலடோனியப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வின்மூலம் தெரியவந்துள்ளது.
இருப்பினும், உட்கார்ந்திருக்கும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் மூன்று நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதால் முன்கூட்டியே இறப்பதைத் தள்ளிப்போடலாம் என்று அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
மேலும், திடீரென ஒருவர் இறந்துபோகும் அபாயத்தையும் இது குறைக்கலாம்.
ஒரே இடத்தில் வெகுநேரம் அமர்ந்திருப்பது, உடற்பயிற்சியினால் கிடைக்கும் பலன்களையும் இல்லாமல் செய்துவிடும் என்று அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
நான்கு ஆண்டுகளாக நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் கடந்த ஆண்டு மே மாதம் பிரிட்டிஷ் விளையாட்டு மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டன.
அமெரிக்கா, பிரிட்டன், சுவீடன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 130,000 பேருக்கு மேற்பட்டோரிடத்தில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆறு ஆய்வுகள் மூலம் பெறப்பட்ட தரவுகளை கேலடோனியப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் பகுப்பாய்வு செய்தனர்.
ஓடுதல், நடத்தல், அமர்தல், வீட்டு வேலை போன்ற உடல் சார்ந்த வெவ்வேறு நடவடிக்கைகள் இறப்பு விகிதத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதும் ஆராயப்பட்டது.
தரவுகளை ஆராய்ந்த பிறகு, ஒருநாளைக்கு ஏழு மணி நேரத்திற்கும் குறைவாக அமர்ந்திருப்பவர்கள் நாள்தோறும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால் முன்னதாகவே இறக்கும் வாய்ப்பை 80% வரை குறைக்கலாம் என்று ஆய்வாளர்கள் முடிவிற்கு வந்தனர்.
ஆயினும், நாளொன்றுக்கு 11 முதல் 12 மணி நேரத்திற்கும் மேலாக ஒருவர் உட்கார்ந்து இருந்தால், அவர்கள் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தாலும் முன்னதாகவே இறந்துவிடும் அபாயம் குறைவதில்லை என்பதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
இறுதியாக, ஒருவர் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் மூன்று நிமிடங்களுக்குப் பல்வேறு உடற்பயிற்சிகளிலும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதன்மூலம் முன்கூட்டியே இறக்கும் அபாயத்தை 30% குறைக்கலாம் என்று அவர்கள் முடிவிற்கு வந்தனர்.
மிதமானது முதல் கடுமையான உடற்பயிற்சியும் உடல் சார்ந்த மற்ற இலேசான நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் மிகுந்த நன்மை பயக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்த ஆய்வின்படி, ஒருவர் ஏழு முதல் எட்டு மணி நேரம் உறங்க வேண்டும் என்றும் வேலைக்குச் சென்றுவந்த பின்னரும் சுறுசுறுப்புடன் இயங்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
ஒரு மணி நேரத்திற்கு மூன்று நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய முடியாவிடில், எத்தனை மணி நேரம் அமர்ந்துள்ளீர்கள் என்பதற்கு ஏற்ப உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்கலாம்.

