ஒருநாளைக்கு நான்கு மணி நேரம் அல்லது அதற்குமேல் தொலைக்காட்சி பார்ப்போருக்கு, இரண்டரை மணி நேரத்திற்கும் குறைவாகப் பார்ப்போரைவிட இரத்தம் உறைந்து, கட்டியாக மாறும் ஆபத்து 35% அதிகம் என்றும் அது உயிருக்கே ஆபத்தாகலாம் என்றும் அண்மைய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டு உள்ளது.
இதுகுறித்த ஆய்வுக் கட்டுரை, 'ஐரோப்பிய இதய நோய்த் தடுப்பு மருத்துவவியல் சஞ்சிகை'யில் வெளியாகியுள்ளது.
"மற்ற நேரங்களில் சுறுசுறுப்பாக இருந்தாலும், நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் இரத்தம் உறைந்து கட்டியாகும் அபாயத்தைத் தடுக்க முடியாது என்பதும் எங்களது ஆய்வு முடிவுகள் மூலமாகத் தெரியவந்துள்ளது," என்றார் பிரிட்டனின் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் சேட்டர் குனுட்சர்.
"தொலைக்காட்சியிலேயே மூழ்கிவிடாமல் அவ்வப்போவது இடைவேளை விடவேண்டும். அரைமணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து நின்று உடலை நீட்டி மடக்கலாம். அல்லது சைக்கிளோட்ட உடற்பயிற்சிக் கருவியில் பயிற்சி செய்யலாம். அத்துடன், தொலைக்காட்சி பார்க்கும்போது சுகாதாரமற்ற நொறுக்குத்தீனிகளைத் தவிர்த்து விடுங்கள்," என்றார் டாக்டர் குனுட்சர்.
இந்த ஆய்வில் 40 வயதிற்கு மேற்பட்ட 131,421 பேர் பங்கெடுத்தனர். நாளொன்றுக்கு நான்கு மணி நேரத்திற்குமேல் தொலைக்காட்சி பார்ப்போர், இரண்டரை மணி நேரத்திற்கும் குறைவாகப் பார்ப்போர் என இரு பிரிவுகளாக அவர்கள் பிரிக்கப்பட்டு, ஆய்வு நடத்தப்பட்டது.
பொதுவாகவே, நீண்ட நேரம் தொடர்ச்சியாக அமராமல் அவ்வப்போது எழுந்து நடக்க வேண்டும் என்றார் டாக்டர் குனுட்சர்.

