விண்டோஸ் 11க்கான ஆண்ட்ராய்ட் விளையாட்டுகளை கூகல் நிறுவனம், தனது 'ப்ளே கேம்ஸ்' செயலி மூலம் அறிமுகம் செய்துள்ளது.
ஹாங்காங், தென்கொரியா, தைவான் போன்ற நாடுகளைச் சேர்ந்த விண்டோஸ் 11 பயனாளர்களுக்கு சோதனை ஓட்டமாக வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் ஆண்டிராய்ட் விளையாட்டுகளான மொபைல் லீஜென்ட்ஸ், சம்மனர்ஸ் வார், ஸ்டேட் ஆஃப் சர்வைவல் மற்றும் த்ரீ கிங்டம் டேக்டிக்ஸ் போன்ற கணினி விளையாட்டுகளைப் பதிவிறக்கம் செய்து விளையாடலாம். இந்த வசதி வெகு விரைவில் மற்ற நாடுகளுக்கும் அது விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்டோஸ் 11 இயங்குதளத்திற்கான கூகலின் இந்த தனித்து இயங்கக்கூடிய செயலியை இப்போது எல்லாராலும் பயன்படுத்தமுடியாது.
கூகல் தனது ஆண்ட்ராய்ட் விளையாட்டுச் செயலியை உலகம் முழுதும் உள்ள மைக்ரோசாப்ட் விண்டோஸ் 11 கணினிகளின் பயன்பாட்டுக்கு வெகுவிரைவில் அனுமதிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கூகலின் இந்தச் செயலி மூலம், நாம் விரும்பும் திறன்பேசி விளையாட்டுகளை கணினியின் பெரிய திரையில் விசைப்பலகை, சுட்டி (மவுஸ்) உதவியுடன் விளையாடலாம். ஆண்டிராய்ட் செயலிகள் இயங்குவதற்கென விண்டோஸ் 11 இயங்குதளத்தில் ல் மைக்ரோசாப்ட் நிறுவனம் சில சிறப்புத் தளங்களை அமைத்துள்ளது.

