உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க, உடற்பருமனைக் குறைக்க, உடற்திறனைப் பேண, சுறுசுறுப்புடன் திகழ என ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்திற்காக கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்யக்கூடும்.
அதற்காக, ஒரே மாதிரியான பயிற்சிகளைச் செய்து சலிப்படையாமல் இருக்க, புதுப் புது பயிற்சிமுறைகளை நாடுவோரும் உண்டு.
அப்படி, கலவையான உடற்பயிற்சிகள் உடலுக்கும் மனத்திற்கும் நல்லது என்கின்றனர் அத்துறையைச் சேர்ந்த வல்லுநர்கள்.
அதே வேளையில், அப்பயிற்சிகளைத் தொடங்குமுன் குறிப்பிட்ட ஒரு விஷயத்தை மட்டும் தவிர்க்கக் கூடாது என்று அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
'வார்ம் அப்' எனப்படும் ஆயத்தப் பயிற்சிதான் அது!
உடற்பயிற்சிக்குமுன் நன்கு ஆயத்தமாவது ஒருவரது உடல் வெப்பநிலையை உயர்த்தும். அது தசைகளுக்கு நல்லது.
தசைகளின் வெப்பநிலை உயரும்போது, அவற்றுக்கு உயிர்வாயு எளிதில் கிடைக்கும். அதனால் தசைகள் சுருங்கி விரிவது எளிதாகும். அதன்மூலம் கடுமையான பயிற்சிகளையும் எளிதாகச் செய்வது சாத்தியமாகும். அத்துடன், இதயமும் ஆயத்தமாக வாய்ப்பு தரப்படுகிறது.
உடற்பயிற்சியைத் தொடங்க ஏதுவாக தங்களது உடற்தசைகளை நன்கு ஆயத்தப்படுத்திக்கொள்ளாமல் நேரடியாக கடும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதால் காயமடையும் அபாயம் அதிகம்.
உடற்பயிற்சிக்குமுன் உடலை ஆயத்தப்படுத்திக்கொள்வதன் அவசியம் குறித்து தமது அண்மைய இன்ஸ்டகிராம் பதிவில் எழுதியுள்ளார் இந்தியாவின் முன்னணி உடற்திறன் பயிற்றுவிப்பாளரான சுமயா டால்மியா.
"டிரெட்மில்லில் ஓடுவதுதான் 'வார்ம் அப்' என்றில்லை. கை கால்களை நீட்டி மடக்குதல், முன்னும் பின்னுமாகச் சுழற்றுதல், இடுப்பை வளைத்து இருபுறமும் உடலைத் திருப்புதல், நின்ற இடத்திலேயே ஓடுதல் போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டு, உடற்பயிற்சி செய்ய ஆயத்தமாகலாம்," என்கிறார் திருவாட்டி சுமயா.
உடற்பயிற்சிக்கு ஆயத்தமாவது குறித்த சில நிமிடக் காணொளியையும் அவர் தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அத்துடன், ஆயத்தமாதல் ஏன் அவசியம் என்பதற்குப் பின்வரும் சில காரணங்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.
♦ ஆயத்தப் பயிற்சிகள் மூலம் ஒருவரது உடல் இயக்கத்திற்குத் தயாராக இருப்பதை உறுதிசெய்வதன் மூலம் காயம் ஏற்படாமல் தடுக்கலாம்.
♦ ஆயத்தப் பயிற்சிகள் தசைகளில் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி, மூட்டுகளை ஆயத்தப்படுத்தி, திடீர் இயக்கத்திற்கு அவற்றைத் தயார்நிலையில் வைத்திருக்கும்.
♦ ஆயத்தப் பயிற்சிகளை மேற்கொண்டு நன்கு தயாராவது மூட்டுகளின் இயக்கத்தை மேம்படுத்தும்.
♦ ஆயத்தப் பயிற்சிகள் ஒருவர் விரைந்து செயல்பட உதவுவதுடன் அவரது உடலையும் விழிப்புநிலையில் வைத்திருக்கும்.
"ஒருவர் எவ்வகை உடற்பயிற்சிகளில் ஈடுபட்டாலும், அதற்குமுன் அடிப்படையான சில ஆயத்தப் பயிற்சிகளைச் செய்ய வேண்டியது முக்கியம்," என்றார் திருவாட்டி சுமயா. படம்: இணையம்

