கட்டணம் செலுத்தும் சேவை வழங்குவதில் முன்னணியில் இருக்கும் 'பேபால்' நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றும் குமாரி கங்காதேவி பாலகிருஷ்ணன் (படம்) ஒவ்வொரு நாளும் தமது பணியின்போது புதுப் புது சவால்களை எதிர்கொள்கிறார்.
தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் தொழில்நுட்பத் திறன்பயிற்சி, வேலை அமர்வுத் திட்டம் மூலமாக் 2021 மே மாதம் 'பேபால்' நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார் 29 வயதான குமாரி கங்காதேவி.
இப்போது இவர் அந்நிறுவனத்தின் ஒழுங்குமுறை மற்றும் வணிகத் தேவைகளை உறுதிசெய்ய உலகம் முழுவதுமுள்ள வாடிக்கையாளர்களுடன் பணியாற்றுகிறார்.
சென்ற ஆண்டு செப்டம்பரில் 'பேபால்' நிறுவனத்தில் இவர் பணி நிரந்தரம் செய்யப்பட்டார்.
அதற்குமுன் இன்னொரு தொழில்நுட்ப நிறுவனத்தில் வணிகப் பகுப்பாய்வாளராகவும் மென்பொருள் பொறியாளராகவும் பணியாற்றினார் குமாரி கங்காதேவி.
இப்போது வேலையிடத்தில் தமது அன்றாட நடவடிக்கைகள், பணிகளின் தன்மைக்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே இருக்கும் என்றார் இவர்.
குறிமுறைகள் எழுதுதல், நிரல்கள் சரியாக இயங்குகின்றனவா எனச் சோதித்தல், புலனாய்வு, ஆய்வு எனப் பல்வேறு வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கும் என்று இவர் விவரித்தார்.
"அதனால், எனக்கு ஒவ்வொரு நாளும் வித்தியாசமானதாக இருக்கும். பேபால் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக எனது பணியை மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் செய்வதற்கு அதுவும் ஒரு காரணம்," என்றார் இந்த இளையர்.
தொழில்நுட்பத் திறன்பயிற்சி, வேலை அமர்வுத் திட்டத்தின்கீழ் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்துடன் பேபால் நிறுவனம் கடந்த ஆண்டு பங்காளித்துவம் செய்துகொண்டது.
அதன்படி, அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்ட அந்நிறுவனம், சிங்கப்பூரில் தனது ஊழியரணியை கிட்டத்தட்ட 25% அதிகப்படுத்தும் என அறிவித்து இருந்தது.

