பயனர் அனுபவத்தை மேம்படுத்த குறுஞ்செய்திச் செயலியான வாட்ஸ்அப் பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குழு உரையாடல்களில் அனுப்பப்படும் செய்திகளை, அக்குழுவில் அனைவருக்கும் தெரியாதபடி நீக்க அதன் நிர்வாகிக்கு (admin) அதிகாரம் வழங்கும் வசதி விரைவில் அறிமுகமாகலாம் எனச் சொல்லப் படுகிறது. அப்படி ஒரு செய்தி அழிக்கப்பட்டபின், 'இது குழு நிர்வாகியால் நீக்கப்பட்டது' எனத் திரையில் ஒரு குறிப்பு தோன்றும்.
வாட்ஸ்அப்பில் 'டெலிட் ஃபார் எவ்ரிஒன்' வசதியும் மேம்படுத்தப் படவுள்ளதாக 'டபிள்யூஏ பீட்டா இன்ஃபோ' இணையத்தளம் அண்மையில் செய்தி வெளியிட்டு இருந்தது. இப்போது, ஒருவர் செய்தி அனுப்பி ஒரு மணி எட்டு நிமிடம் ஏழு நொடிகளுக்குள் எவரும் பார்க்க முடியாமல் நீக்கிவிடலாம். இந்நிலையில், அந்தக் கால அவகாசத்தை ஏழு நாள்கள் எட்டு நிமிடங்களாக நீட்டிக்க வாட்ஸ்அப் திட்டமிட்டு வருவதாகக் கூறப்பட்டது.
முன்னதாக, ஒருவர் தாம் அனுப்பிய செய்தியை ஒருவரும் பார்க்க முடியாதபடி எப்போது வேண்டுமானாலும் அழிக்க முடியும் வகையில், அந்த அம்சம் மேம்படுத்தப்பட உள்ளதாக ஊகச் செய்தி வெளியானது. ஆனால், அந்தக் காலக்கெடு மாற்றத்தைப் பின்னொரு நாளில் நடைமுறைப்படுத்த வாட்ஸ்அப் திட்டமிட்டு வருகிறது.

