சீனப் புத்தாண்டு

சீனப் புத்தாண்டு

3 mins read

பாரம்பரிய பழக்கங்கள்

சீனப் புத்­தாண்­டின்போது, ​செய்ய வேண்­டிய விஷ­யங்­க­ளுக்கு நீண்ட பட்­டி­யலே உள்­ளது. பண்­டி­கைக்கு முந்­தைய ஒரு வாரத்­தில் இருந்து 15வது நாள் வரை, பல பழக்­க­வ­ழக்­கங்­கள் ஆயி­ரக்­க­ணக்­கான ஆண்­டு­களாக பர­வ­லாக கடைப் ­பி­டிக்­கப்­­பட்டு வரு­கின்­றன.

உற­வு­களைப் புதுப்­பிக்­கும் 'குடும்ப ஒன்­று­கூ­டல் விருந்து', 'டம்ப்­ளிங்ஸ்' உண­வைச் சாப்­பி­டு­வது, பட்டாசு வெடிப்பது, பெரி­ய­வர்­க­ளைச் சந்­தித்து ஆசி பெறு­வது மட்­டு­மல்­லா­மல் சீனர்­கள் சில முக்கிய பழக்­கங்­களை தொன்­று­தொட்டு பின்­பற்றி வரு­கின்­ற­னர்.

இவ்­வாண்டு கொவிட்-19 தொற்று மற்றும் கட்டுப்பாடுகளுக்கு இடையே புதிய புலி ஆண்டை நாளை சீனர்கள் வரவேற்கின்றனர்.

வீட்டை தூய்மைப்படுத்துதல்:

வீட்டைச் சுத்தம் செய்வது சீனப் புத்தாண்டின் முக்கிய பாரம்பரியமாகும். தரை, சுவர், வீட்டின் ஒவ்வொரு மூலையும் சுத்தம் செய்யப்படுகின்றது. சீன மொழியில் 'Dust' என்பது பழையவை என்று பொருள்படும். தமிழர்களின் போகி பண்டிகை நாளில் செய்வதைப் போல பழைய பொருட்களையெல்லாம் அகற்றி புதிய தட்டுகளையும் புதிய அறைகலன்களையும் வாங்கி அலங்கரித்து புதிய தொடக்கத்திற்குத் தயாராகிறார்கள்.

'டம்ப்ளிங்ஸ்' உணவு:

சீனப்புத்தாண்டின்போது 'டம்ப்ளிங்ஸ்' முக்கிய உணவாகும். மாவில் செய்யப்பட்ட உருண்டையில் விருப்பத்திற்கு ஏற்ப உள்ளே பல்வேறு உணவுப் பொருள் நிரப்பப்பட்டிருக்கும். புத்தாண்டு தினத்தின் முந்தைய நாள், புத்தாண்டு மற்றும் புத்தாண்டின் 5வது நாளில் 'டம்ப்ளிங்ஸ்' சாப்பிடுவது ஒரு வழக்கமாகும்.

சிவப்பு உறை:

அதிர்ஷ்டப் பணம் என்றழைக்கப்படும் சிவப்பு உறையை (ஹொங் பாவ்) குடும்பத்தின் பெரியவர்கள் முன்பே குழந்தைகளுக்காகத் தயாரித்து குடும்ப ஒன்றுகூடல் விருந்திற்குப் பிறகு கொடுப்பார்கள். குழந்தைகள் ஆண்டு முழுவதும் பாதுகாப்பாகவும் வளமாகவும் வாழ வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த அதிர்ஷ்டப் பணம் வழங்கப்படுகிறது. இன்றும் இந்தப் பழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. பணத்தின் அளவு மட்டுமே மாறியுள்ளது. குழந்தைகள் இதனை புத்தகங்கள் உள்ளிட்ட பள்ளிக்குத் தேவையான எழுதுப் பொருட்களை வாங்கப் பயன்படுத்து கின்றனர். சில குடும்பத்தினர் பிள்ளைகளின் எதிர்கால பயன்பாட்டிற்காகச் சேமித்து வைக்கின்றனர்.

சீனப் புத்தாண்டு முந்தைய நாள்:

குடும்ப ஒன்றுகூடல் விருந்து, மூதாதையர்களை வழிபடுவது ஆகியவை புத்தாண்டுக்கு முன்னதாக சீனர்கள் பின்பற்றும் புத்தாண்டின் இரு முக்கிய சிறப்பு அம்சங்களாகும். குடும்ப விருந்துக்கு முன்பு குடும்பத்தினர் தங்களுடைய மூதாதையர்களுக்கு உணவு, பழங்கள், தேநீர் உள்ளிட்டவற்றை வைத்து வணங்கிய பிறகு குடும்ப விருந்தைத் தொடங்குகின்றனர்.

குடும்ப விருந்து:

குடும்ப விருந்தில் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றுகூடி தங்களுடைய அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தி குடும்பப் பிணைப்பை மறுவுறுதிப்படுத்துகின்றனர். எவ்வளவு தொலைவில் இருந்தாலும் புத்தாண்டு குடும்ப விருந்தில் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றுகூடுவது வழக்கமாக இருந்து வருகிறது. விருந்தில் வீட்டில் தயாரிக்கப்பட்ட ஆடம்பர உணவுகள் பரிமாறப்படுகின்றன. 'டம்ப்ளிங்ஸ்தவிர அதிர்ஷ்டத்திற்காக முழு மீன் உணவும் விருந்தில் இருப்பது வழக்கம்.

விளக்குத் திருவிழா: முதல் சந்திர மாதத்தின் 15வது நாளில் கொண்டாடப் படும் விளக்குத் திருவிழா, புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் நிறைவைக் குறிக்கிறது. அன்று மாலையில் வெவ்வேறு வடிவங்களில் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. பண்டைய காலங்களில் மெழுகுவத்தி உள்ளே வைக்கப்பட்டு காகிதம் அல்லது பட்டுத் துணியால் விளக்குகள் செய்யப்பட்டன. தற்போதைய உலகில் மெழுகுவத்திகளுக்குப் பதிலாக மின்விளக்குகள், எல்.ஈ.டி விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. விளக்குத் திருவிழாவில் மற்ற இனத்தவர்களும் பங்கேற்று மகிழ்கின்றனர்.

செய்யக்கூடாத சில விஷயங்கள்: புத்தாண்டு அன்று வீட்டைப் பெருக்கி குப்பைகளை வெளியே தள்ளுவது கூடாது. அதிர்ஷ்டம் போய்விடும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. சீனப் புத்தாண்டின் முதல் இரண்டு நாளில் துணிகளை துவைப்பது, முடி வெட்டுவதுகூட நல்லதல்ல என்று கருதப்படுகிறது. கறுப்பு, வெள்ளை உடை அணியக் கூடாது. சீனப் புத்தாண்டில் யாருக்கும் கடன் கொடுக்கக் கூடாது. சீனர்களின் நம்பிக்கையின்படி அப்படிச் செய்தால் கடன் வாங்க ஆண்டு முழுவதும் அதிகமானவர்கள் வருவார்களாம்.