இன்று சீனர்களின் சந்திரப் புத்தாண்டு நாள். அதுவும் புலி ஆண்டின் முதல் நாள்!
புலிகளை நினைவுகூரும் இந்நாளில், சிங்கப்பூரின் தேசிய மலரான ஆர்க்கிட்டிலும் ஒரு புலி இனம் இருப்பது வியப்பளிக்கும் தகவல்.
சிங்கப்பூரில் புலிகள் ஒவ்வொன்றாக இறந்த நிலையில், அவற்றின் நினைவாகப் பெயர் சூட்டப்பட்ட 'புலி ஆர்க்கிட்' மலர் தேசிய பூங்காக் கழகத்தால் வெற்றிகரமாக மறுஅறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நன்கு வளர்ந்த புலி ஆர்க்கிட் தாவரம், ஒரு டன்னுக்கும் மேல் எடைகொண்டதாக இருக்கும். உலகில் இப்போதுள்ள ஆர்க்கிட் இனங்களில் ஆகப் பெரியதும் உயரமானதும் இதுதான்.
புலித்தோலில் காணப்படுவதுபோல, இந்த ஆர்க்கிட் மலரின் மஞ்சள் இதழ்களில் பழுப்புநிறத் திட்டுகள் இருப்பதனால் இதற்குப் 'புலி ஆர்க்கிட்' எனப் பெயர் சூட்டப்பட்டது.
இவ்வகை ஆர்க்கிட் இனத்தைக் கண்காணிக்கவும் பாதுகாக்கவும் தேசிய அளவில் ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகப் பூங்காக் கழகத்தைச் சேர்ந்த திருவாட்டி தெரீஸ் சூ கூறினார்.
அதன் காரணமாக இப்போது சிங்கப்பூரில் கேலாங் பூங்கா இணைப்புப்பாதை, ஜூரோங் லேக் தோட்டங்கள், பாசிர் ரிஸ் பூங்கா, சுங்கை பூலோ சதுப்புநிலக் காடுகள் உட்பட்ட இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலி ஆர்க்கிட் தாவரங்கள் காணப்படுகின்றன.
1900களில், வாழிட இழப்பு காரணமாக இந்த ஆர்க்கிட் இனம் காடுகளில் அருகிப்போனது.
இதனையடுத்து, ஆர்க்கிட் பாதுகாப்புத் திட்டத்தைச் சிங்கப்பூர் பூமலை ஏற்படுத்தியது. அதன்படி, சாலையோர மரங்கள் போன்ற வாழிடங்களிலும் பூங்காக்களிலும் புலி ஆர்க்கிட் மலர் இனத்தை மறுஅறிமுகம் செய்யும் முயற்சி 1995ஆம் ஆண்டில் தொடங்கியது.
நான்காண்டுகளுக்குப்பின், புலி ஆர்க்கிட் நாற்றுகள் தோட்டங்களிலும் புலாவ் உபின், புக்கிட் தீமா இயற்கைப் பாதுகாப்பு வனப்பகுதியில் உள்ள வருகையாளர் மையம் ஆகிய இடங்களில் நடப்பட்டன.
புலி ஆர்க்கிட் பூக்கும் தன்மையைக் கணிக்க முடியாது என்றும் சில நேரங்களில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் என்றும் டாக்டர் சூ சொன்னார்.
ஹாலந்து சாலை, கென்ட் ரிட்ஜ் பூங்கா போன்ற இடங்களில் நடப்பட்டு பத்து ஆண்டுகளுக்குப்பின், 2013 மார்ச்சில் புலி ஆர்க்கிட் முதன்முறையாகப் பூத்தது.
"மழைக்காலம் முடிந்து, பின் வெயில் தொடங்கி, வறண்ட சூழல் நிலவும்போது புலி ஆர்க்கிட் பூப்பதைக் காண முடிகிறது. ஒவ்வொரு பூங்கொத்தும் ஒரு மாதத்திற்குமேல் வாடாமல் இருக்கும்," என்றார் டாக்டர் சூ.
புலி ஆர்க்கிட் மற்ற தாவரங்களை அல்லது மரங்களைத் தொற்றிக்கொண்டு வளரும் என்றாலும் உணவிற்காக அவற்றைச் சார்ந்துஇருப்பதில்லை.
சிங்கப்பூரின் ஆகப் பெரிய புலி ஆர்க்கிட் தாவரத்தைப் பூமலையில் காணலாம். கிட்டத்தட்ட ஐந்து மீட்டர் விட்டம் கொண்ட அந்த ஆர்க்கிட் தொகுதி, 150 ஆண்டுகளுக்கும் மேலாக அதே இடத்திலேயே வளர்ந்து வருகிறது.

