தவளையின் துண்டான காலை மருந்துக் கலவையின் துணையால் மீண்டும் வளரச் செய்து அமெரிக்க அறிவியல் ஆய்வாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.
வெறும் 24 மணி நேரமே நீடித்த சிகிச்சைக்குப் பின், 18 மாதங்கள் கழித்து இந்த ஆப்பிரிக்க இனத் தவளையின் துண்டான கால் மீண்டும் வளர்ந்தது.
தவளைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே பெரும் வேறுபாடுகள் இருந்தாலும், மனிதர்களிடத்தில் வெட்டுப்பட்ட கை கால்களைத் திரும்பவும் வளரச் செய்ய முடியும் எனும் நம்பிக்கையை இந்த ஆய்வு ஏற்படுத்தி இருக்கிறது.
"நாங்கள் தேர்வுசெய்த மருந்துகள், கிட்டத்தட்ட முழுமையான காலை உருவாக்கி இருப்பதைக் காண்பது மிகுந்த உற்சாகம் தருவதாக உள்ளது," என்றார் இந்த ஆய்வில் பெரும்பங்கு ஆற்றிய டாக்டர் நிரோஷா முருகன் (பெட்டிச் செய்தியில் படம்).
ஐந்துவித மருந்துகளைப் புரதக் களிமத்துடன் சேர்த்து, அவற்றை 'பயோடோம்' எனும் ஒரு சிலிக்கான் குப்பியில் இட்டு, துண்டான காலுடன் ஆய்வாளர்கள் கட்டினர்.
கிட்டத்தட்ட முழுமையாக மீண்டும் வளர்ந்த தவளையின் காலில் எலும்பு இல்லாத விரல்களும் உண்டாயின.
மீண்டும் வளர்ந்த கால் அசைவதாகவும் அதனைத் தொட்டபோது எதிர்வினை ஆற்றியதாகவும் ஆய்வாளர்கள் கூறினர்.
அமெரிக்காவின் டஃப்ட்ஸ் மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த ஆய்வில் பங்கெடுத்தனர்.
"தவளையின் துண்டான கால் மீண்டும் உருவாக பல மாதகாலம் ஆனபோதும் குறுகிய காலமே அதற்கு மருந்து தேவைப்பட்டது. தவளைகளிலும் மற்ற விலங்குகளிலும் மீளுருவாக்கம் என்பது செயலற்ற நிலையில் இருக்கலாம் என்பதையும் அதனைத் தூண்ட முடியும் என்பதையும் இது காட்டுகிறது," என்றார் டாக்டர் நிரோஷா.
நட்சத்திர மீன், நண்டு, பல்லி போன்ற பல உயிரினங்களுக்கு, அவற்றின் கைகால் துண்டானால் அவற்றை மீண்டும் உருவாக்கிக்கொள்ளும் ஆற்றல் உண்டு. தட்டைப்புழு போன்ற வேறு சில உயிரினங்களைத் துண்டுதுண்டாக்கினாலும் அவை ஒவ்வொன்றும் மீண்டும் ஒரு முழு உயிரியாக உருவெடுக்கும் திறன் படைத்தவை.
ஆனால், மனிதர்களுக்கு அத்தகைய ஆற்றல் இல்லை. 50 விழுக்காட்டை இழந்துவிட்டாலும் மீண்டும் அதனை உருவாக்கிக்கொள்ளும் ஆற்றல் கல்லீரலுக்கு மட்டுமே உண்டு.
கனடாவில் உன்னத விருது பெற்ற இந்திய வம்சாவளி அறிவியலாளர்
கனடாவில் கல்லூரி, பல்கலைக்கழக அளவில் அறிவியலில் அருஞ்சாதனை படைப்போருக்கு ஆண்டுதோறும் உன்னத விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், அண்மையில் தம்முடைய புத்தாக்கமிக்க ஆய்வுப் பணிக்காகவும் ஆசிரியப் பணியில் உன்னதநிலையுடன் விளங்கி வருவதற்காகவும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் நிரோஷா முருகனுக்கு (படம்) 'வளர்ந்து வரும் நட்சத்திரம்' எனும் விருதைக் கனடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
"சிறப்புமிக்க இவ்விருது கிடைத்திருப்பதை மிகுந்த கௌரவமாகக் கருதுகிறேன். ஆய்வாளராக தொடக்க கட்டத்தில் இருந்தபோதும் இந்த விருதுக்கு என்னை முன்மொழிந்தோருக்கும் எனக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வருவோருக்கும் மிகுந்த நன்றியுடையவளாகிறேன்," என்றார், அலகோமா பல்கலைக்கழகத்தில் உயிரியல் துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் டாக்டர் நிரோஷா.

