மற்ற நாடுகளைவிட, இந்தியர்கள் தங்களது உணவில் மிகுதியாகக் காரம் சேர்த்துக்கொள்கின்றனர். அதைத் தவிர்ப்பது பலராலும் முடியாது. ஆனாலும், அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு எனும் பழமொழி காரத்திற்கும் பொருந்தும்.
"ஒருவரின் உடல் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவைக் காட்டிலும் அதிகமான காரம் சேர்த்துக்கொள்ளும்போது, வாய்ப்புண் முதல் வயிற்றுப்புண்வரை அது பல உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும். வேறு நோய்கள் இருப்பின், உணவில் அதிக காரம் சேர்த்துக்கொள்வது இன்னும் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்," என்கிறார் ஹைதராபாத்தில் உள்ள 'கேர் மருத்துவமனை'யின் தலைமை மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் சுஷ்மா.
காரம் மிகுந்த உணவுப்பொருள்களை உட்கொள்வது எந்தெந்த வழிகளில் உடலைப் பாதிக்கும் என்று அவரிடம் 'நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' கேட்டது.
அதற்கு, "அதிக அளவில் காரம் சேர்த்துக்கொள்வது உணவுக்குழாயின் மேல் அடுக்கை அரித்துவிடும். சில வேளையில் குடற்பகுதியையும் அரித்துவிடும். வயிற்றுப்போக்கு, புளிப்புத்தன்மை, வயிற்றில் எரிச்சல் ஆகியவை அதிக காரம் சேர்ப்பதால் ஏற்படும் பொதுவான பிரச்சினைகள்," என்று டாக்டர் சுஷ்மா பதிலளித்தார்.
எவ்வளவு காரம் சேர்த்துக்கொள்ளலாம்?
"ஒருவருக்கொருவர் அந்த அளவு வேறுபடும். ஒருவர் வளரும்போது எத்தகைய உணவை உண்கிறார் என்பதைப் பொறுத்து அது அமையும். எடுத்துக்காட்டாக, வட இந்தியர்களைக் காட்டிலும் தென்னிந்தியர்களின் உடல் அதிக காரத்தை ஏற்றுக்கொள்ளும். திடீரென மிகுதியாக அதைச் சேர்த்துக்கொள்ளும்போது பிரச்சினை ஏற்படுகிறது. உடல் ஏற்றுக்கொள்ளாவிடில் அந்த உணவுப்பொருளை உட்கொள்வதை நிறுத்திவிடுவதே நல்லது. உங்கள் உடல் சொல்வதைக் கேளுங்கள்," என்கிறார் ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையின் தலைமை ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ஹரிதா ஷியாம்.
தங்களுக்குப் பிடித்தமான காரமான உணவுவகைகளை எப்போதாவது எடுத்துக்கொள்ளலாம் என்கிறார் அவர்.
"எப்போதாவது சாப்பிட்டால் பிரச்சினை இல்லை. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அதனைச் சாப்பிடுங்கள். அந்த உணவு வகைகள் நாவூற வைப்பதாக இருந்தாலும், உண்டபின் பிரச்சினையை ஏற்படுத்திவிடும். காரமான உணவுவகைகளைத் தொடர்ந்து எடுத்துக்கொண்டால், அவை இரைப்பையிலும் குடலிலும் மோசமான பிரச்சினைகளை ஏற்படுத்திவிடலாம்," என்று டாக்டர் ஹரிதா எச்சரித்தார்.
மருத்துவக் குணமிக்க மணமூட்டிகள்
பெரும்பாலான மணமூட்டிகள் (Spices) மருத்துவக் குணம் கொண்டவை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், அவற்றை எந்த அளவில், எந்த முறையில் சேர்த்துக்கொள்கிறோம் என்பதில் கவனம் தேவை என்பது அவர்களின் கருத்து.
"மணமூட்டிகளை மிதமான அளவில், நன்றாகச் சமைத்தபின் உட்கொள்வது அற்புதமான பலன்களை அளிக்கும். சமைக்கும்போது ஏலக்காய், இலவங்கம், கிராம்பு ஆகியவற்றை எண்ணெய்யில் நேரடியாகச் சேர்க்கவும். அவற்றில் நார்ச்சத்தும் ஆன்டிஆக்சிடென்டுகளும் அதிகம். அவை உடல் எடையைக் குறைக்க உதவும்.
"மஞ்சளும் இஞ்சியும் மருத்துவப் பண்புகள் மிக்கவை. இஞ்சியைத் தேநீரில் சேர்த்துக்கொள்ளலாம். வெள்ளைப்பூண்டில் இதய நோயாளிகளுக்கு நற்பலன் தரக்கூடிய 'அலிசின்' எனும் வேதிப்பொருள் உள்ளது. ஆயினும், அதிகமான மிளகாய்த்தூள், அல்லது பச்சை மிளகாய் மனிதக் குடலுக்கு நல்லதல்ல," என்றார் டாக்டர் சுஷ்மா.
"ஒருவருக்கு உணவாக இருப்பது இன்னொருவருக்கு நஞ்சாக இருக்கலாம். வெள்ளரிக்காய்கூட ஒருவருக்கு வயிற்றுவலியை ஏற்படுத்திவிடலாம். அதனால், ஒருவர் தமது உடலமைப்பை அறிந்துகொண்டு, அதற்கேற்ற உணவை உட்கொள்வது நல்லது," என்றார் டாக்டர் ஹரிதா.

