முப்பது வினாடிகளுக்கு 'வீடியோ செல்ஃபி' எடுத்துக் கொடுத்தால், பொதுவான உடல்நலன் குறித்த முப்பது விதமான காரணிகளைக் கூறும் செயலி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் டொரோன்டோவிலுள்ள நியூரலாஜிக்ஸ், 'அனுரா' என்ற செயலி மூலம் இதை சாதித்துள்ளது.
இந்தச் செயலி கைபேசி, கணினி ஆகிய இரண்டிலும் செயல்படும். ஒருவர் அரை நிமிடம் செல்ஃபி எடுத்தால், அதை மருத்துவ ரீதியில் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் ஒன்று அலசி ஆராயும்.
செல்ஃபியில் தெரியும் நபரின் ரத்த அழுத்தம், மூச்சு விடும் வேகம், மனச்சுமை, செரிமானத் திறன் என்று உடல்நலத்துக்கு அடிப்படையான பல காரணிகளை இந்தச் செயலி அலசி, முடிவை அரை நிமிடத்தில் சொல்லிவிடுகிறது.
மனித தோலில் பிரதிபலிக்கும் ஒளி, அவரது ரத்த ஓட்டத்தையும் தெளிவாகக் காட்டும். இந்தத் தகவல்களை வைத்தே, நோயறிதல் பணியை சில வினாடிகளில் முடித்து தருகிறது. அனுரா செயலியை ஒரு தேர்ந்த மருத்துவரின் ஆலோசனைக்கு மாற்றாக பயன்படுத்தக்கூடாது என அதை உருவாக்கியவர்கள் எச்சரிக்கின்றனர்.
தினமும் தன் உடல்நலனைக் கண்காணிக்க வேண்டும் என்று நினைப்போருக்கு அனுரா செயலி ஓர் உதவியாளர்தான் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

