அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயம் அதன் வருடாந்திர சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை கடந்த 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடத்தியது.
150 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றை உள்ளடக்கிய இந்த ஆலயம், உள்ளூர் இந்து சமூகத்தின் சமயத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல், கல்வி உதவித்தொகை, யோகா வகுப்புகள், பல இன மக்களும் கொண்டாடி மகிழும் பண்டிகைகளையும் நடத்தி வருகிறது.
அதோடு, நமது சமுதாயத்தில் உள்ள உடல் ஊனமுற்ற உறுப்பினர்களுக்கு சக்கர நாற்காலிகளையும் ஆலயம் வழங்குகிறது.
2018ஆம் ஆண்டு முதல் அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயம் சீனப் புத்தாண்டு, நோன்புப் பெருநாள், தீபாவளி போன்ற பல்வேறு பண்டிகைகளையும் கொண்டாடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த காலங்களில் இதுபோன்ற கொண்டாட்டங்கள் நேரடியாக நடத்தப்பட்டன.
இதைத்தொடர்ந்து, வெவ்வேறு சமயங்களைச் சேர்ந்த பயனாளிகள் மதிய உணவிற்கு ஆலய வளாகத்திற்கு அழைக்கப்பட்டனர். கராவோக்கே பாடல், பலதரப்பட்ட நிகழ்ச்சிகள், கொண்டாட்ட நிகழ்வு களுடன் சக சிங்கப்பூரர்களை உற்சாகப்படுத்தி வந்தது ஆலயம்.
இவ்வாண்டு, அருள்மிகு தெண்டாயுத பாணி ஆலயம் ஹென்டர்சன் சாலையில் உள்ள வாடகை வீட்டில் குடியிருக்கும் 200 குடியிருப்பாளர்களிடம் சீனப் புத்தாண்டின் கோலாகலத்தை நிறைத்தது. 'ஆங் பாவ்' என்ற சிவப்பு உறை பைகள், ஆரஞ்சு, தன்னார்வத் தொண்டர்களால் தயாரிக்கப்பட்ட சைவ உணவு வகைகளுடன் சீனப் புத்தாண்டு பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் அடித்தள ஆலோசகருமான திருமதி ஜோன் பெரேரா, அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயத்தின் தலைவர் திரு.என்.சண்முகம் மற்றும் 20 ஆலயத் தொண்டர்கள் மக்களுக்கு பரிசுப் பொருள்களை விநியோகம் செய்வதில் பங்கேற்றனர்.

