ஐபோன் பயன்படுத்துவோர் 'படத்தினுள் படம் (Picture-in-Picture)' வசதியைப் பெற மேலும் சில காலம் காத்திருக்க வேண்டும். ஏனெனில், 'ஐஓஎஸ்' இயங்குதளத்தில் அதன் சோதனையோட்டக் காலத்தை யூடியூப் மேலும் நீட்டித்துள்ளது.
ஐபோனில் பிற செயலிகளைப் பயன்படுத்தும்போதும் யூடியூப் காணொளியைப் பார்க்க இந்தப் 'படத்தினுள் படம்' தொழில்நுட்பம் உதவுகிறது.
இப்போதைக்கு 'பிரீமியம்' வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்தத் தெரிவைப் பயன்படுத்த முடியும். அவர்கள் youtube.com/new எனும் பக்கத்திற்குச் சென்று இவ்வசதியைச் செயல் பாட்டிற்குக் கொண்டு வரலாம்.
சோதனைக்காலம் முடிவிற்கு வந்ததும் அனைத்து பயனர்களும் இவ்வசதியைப் பயன்படுத்தலாம்.
எப்படி இதனைப் பயன்படுத்துவது?
ஐபோன் பயனர் ஒருவர் யூடியூப் பார்க்கும்போது மேல்நோக்கித் தள்ளி அல்லது 'ஹோம்' பொத்தானை அழுத்தி, யூடியூப் செயலியை மூட வேண்டும். அதன்பின் சிறுதிரையில் (மினி பிளேயர்) யூடியூப் காணொளி ஓடத் தொடங்கும்.
கடந்த ஆகஸ்ட்டில் இந்தத் தொழில்நுட்பத்தை யூடியூப் முதன்முறையாக 'ஐஓஎஸ்' இயங்குதளத்தில் சோதித்துப் பார்க்கத் தொடங்கியது. அப்போது, 2021 அக்டோபர் இறுதிக்குள் சோதனையோட்டம் முடிவிற்கு வரும் எனக் கூறிய யூடியூப், பின்னர் அதை நீட்டிக் கொண்டே போனது. கடைசியாக, 2022 மார்ச் 14 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.

