ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் பல்வேறு செயலிகளுக்கு இடையே தரவுகளைப் பகிர்ந்துகொள்வதை வரம்பிற்கு உட்படுத்தும் வகையில் ரகசியக்காப்புக் கொள்கையில் மாற்றம் கொண்டுவரவிருப்பதாக கூகல் அறிவித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு 'ஐஓஎஸ்' இயங்குதளத்தில் இப்படி ரகசியக்காப்புக் கொள்கைகளில் மாற்றம் செய்தது.
இந்நிலையில், அதேபோன்ற நடவடிக்கையைத் தானும் மேற்கொள்ளவிருந்தாலும் அது பெரும் இடையூறாக இராது என்று கூகல் தெரிவித்துள்ளது.
ஆண்ட்ராய்ட் ரகசியக்காப்புக் கொள்கை விரைவில் சீரமைக்கப்பட இருந்தாலும், அம்மாற்றம் எப்போது முதல் நடப்பிற்கு வரும் என்பது தெரிவிக்கப்படவில்லை.
தனது புதிய ரகசியக்காப்புக் கட்டுப்பாடுகளில் ஆண்ட்ராய்ட் சாதனங்களுக்கான விளம்பர அடையாளக் குறியீடு மாற்றப்படுவதும் அடங்கும் என்று கூகல் கூறியிருக்கிறது.
அந்த அடையாளக் குறியீடுகளின்மூலம் விளம்பரதாரர்கள் குறிப்பிட்ட ஆண்ட்ராய்ட் கருவிகளைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து, பகிர்ந்துகொள்வர். தனிப்பயனாக்க முறையில் விளம்பரம் செய்ய அவை பல நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன.

