முட்டைமேல் முட்டை வைத்து கின்னஸ் சாதனை!

முட்டைமேல் முட்டை வைத்து கின்னஸ் சாதனை!

2 mins read
81dca61d-5625-4e8a-afba-831bba84188d
முன்னர் மூன்று முட்டைகளை ஒன்றன்மேல் ஒன்றாக நிற்கச் செய்து சாதனை படைத்த முகம்மது மக்பெல், இப்போது அந்த எண்ணிக்கையை நான்காக உயர்த்தி சாதனை படைத்துள்ளார். படம்: கின்னஸ் உலக சாதனை -

இது பார்ப்பதற்கு எளிதாகத் தோன்றலாம், ஆனால் இதைச் செய்து காட்டுவது மிக மிகக் கடினம்.

ஆனாலும், இதைச் செய்துகாட்டி தனது கின்னஸ் சாதனையைத் தானே முறியடித்து, புதிய சாதனை படைத்துள்ளார் ஏமனைச் சேர்ந்த முகம்மது மக்பெல் எனும் இந்த ஆடவர்.

இதற்குமுன் மூன்று முட்டைகளை ஒன்றன்மேல் ஒன்றாக வைத்து நிற்கச் செய்த மக்பெல், அண்மையில் நான்கு முட்டைகளை ஒன்றன்மேல் ஒன்றாக வைத்து, ஆடாமல் அசையாமல் நிற்கச் செய்தார்.

"சமநிலைப்படுத்துவதில் எவ்வளவு கடின உழைப்பு உள்ளது என்பதைப் பலரும் உணர்வதில்லை. சமநிலைப்படுத்தும் கலைக்குப் பொறுமையும் கவனமும் அமைதியாக இருப்பதும் மிக மிக அவசியம். இது, இயற்பியலுடனும் பொறியியலுடனும் தொடர்புடையது என்றுகூட சொல்வேன்," என்றார் மக்பெல்.

ஏமன் நாட்டைச் சேர்ந்த இவர், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் தமது புதிய சாதனையை நிகழ்த்திக் காட்டினார்.

"இந்த முயற்சியில் மிகக் கடினமான விஷயம் என்னவெனில், ஒவ்வொரு முட்டையின் புவி ஈர்ப்பு மையம் எப்புள்ளியில் உள்ளது என்பதைக் கண்டறிவதுதான். ஏனெனில், ஒவ்வொரு முட்டையும் வெவ்வேறு வடிவத்திலும் அமைப்பிலும் இருக்கும்," என்று மக்பெல் சொன்னார்.

பொருள்களை ஒன்றன்மேல் ஒன்றாக நிறுத்தி, விழாமல் சமநிலைப்படுத்தும் திறன் தனக்கு இருப்பதைச் சிறுவயதிலேயே கண்டறிந்த இவர், அப்போதிருந்து அதனை வளர்த்துக்கொண்டு வருகிறார்.

"இலக்குடன் கூடிய ஒரு மனிதனாக என்னை நான் கருதுகிறேன். ஒருநாள் இவ்வுலகிற்கு எனது திறமையைப் பறைசாற்றுவதே எனது குறிக்கோள்," என்றார் மக்பெல்.

இரண்டு சாதனைகளை முறியடித்திருப்பதைத் தான் பெற்ற வரமாகக் குறிப்பிடும் மக்பெல், எதிர்காலத்திலும் மேலும் பல சாதனைகளை நிகழ்த்தக் காத்திருப்பதாகக் கூறுகிறார்.

இவர் பல சமூக ஊடகங்களில் தோன்றியுள்ளார். இவரது சாதனைக் காணொளிகளைப் பல மில்லியன் பேர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.