பண்ணைவீடு ஒன்றில்தான் இந்தப் பெண்களின் அலுவலகம். இவர்களில் சிலர் திறன்பேசிகளையும் கேமராக்களையும் இதற்குமுன் பார்த்ததுகூட இல்லை. திறன்பேசிகளைப் பயன்படுத்தி ஒருவரைப் பேட்டி காண்பது எப்படி என்ற பயிற்சி இவர்களுக்குப் பண்ணைவீட்டில்தான் அளிக்கப்படுகிறது.
'கபார் லஹாரியா' எனும் இணையச் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர்கள்தான் இவர்கள். 'செய்தி அலை' என்பது 'கபார் லஹாரியா' என்பதன் பொருளாகும்.
இந்தப் பெண் செய்தியாளர்களைப் பற்றிய விளக்கப்படத்திற்குக் கடந்த வாரம் ஆஸ்கர் விருது நியமனம் கிடைத்தது. 93 நிமிட 'ரைட்டிங் வித் ஃபயர்' என்ற அந்தப் படம், இவ்வாண்டின் அகாடெமி விருது நிகழ்ச்சியில் 'சிறந்த விளக்கப்படம்' என்ற நியமனத்தைப் பெற்றுள்ளது.
"எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஆனால் அதைச் சரியாக வெளிப்படுத்த முடியவில்லை," என்றார் 'கபார் லஹாரியா'வைச் சேர்ந்த செய்தியாளர் திருவாட்டி மீரா.
வயல்களில் நடப்பது, குழிகள் நிறைந்த சாலைகளில் மோட்டார் வண்டியில் பயணம் செய்வது, பிரச்சினைகளைப் பற்றி கிராமவாசிகள் பேசுவதைத் திறன்பேசியைக் கொண்டு காணொளியாகப் பதிவுசெய்வது போன்றவற்றை மிகச் சாமர்த்தியமாகச் செய்பவர் இவர்.
இருப்பினும், இந்த வீரமங்கையின் கணவர் சொல்வது, "தோல்வியே இவர்களின் தலையெழுத்து," என்பதாகும்.
இந்தியாவின் உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் உள்ள கிராமங்களில் பொதுவாகவே சமூகப் பிரிவினைகளும் கீழ் சாதிக்கு எதிரான வன்முறையும் வழக்கமாக உள்ள நிலையில் அங்குள்ள பெண்களுக்கும் கிராமவாசிகளுக்கும் நேரும் பிரச்சினைகளை 'கபார் லஹாரியா' வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
நிறுவனத்தை 20 ஆண்டுகளுக்கு முன் மாதர் குழு ஒன்று ஆரம்பித்து வைத்ததை அடுத்து இன்று அந்நிறுவனத்திற்கு விளக்கப்படம் வழியாகச் சிறப்பு அங்கீகாரம் கிடைத்துள்ளது. படத்தின் முன்னோட்டக் காட்சியில் பெண் செய்தியாளர்கள் கால்நடையாகச் செல்வதையும் கூட்ட நெரிசலான பேருந்துகளில் இருப்பதையும் கைபேசியைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்வதையும் பார்க்கலாம்.
அச்சிலிருந்து மின்னிலக்கத் தளமாகச் செய்தித்தாள் உருமாறுவதை விளக்கப்படம் எடுத்துச் சொல்கிறது. அதில், துணிச்சல்மிக்க திறன்பேசி செய்தியாளர்களாக அந்தப் பெண்கள் இடம்பெறுகின்றனர்.
சன்டான்ஸ் கழகத்தின் ஆதரவில் இந்த விளக்கப்படம் ஐந்தாண்டுகளாக தயாரிக்கப்பட்டு வந்தது. செய்தித்தாளின் தலைமைச் செய்தியாளர், குற்றச் செயல்களுக்கான செய்தியாளர் இருவரின் பாதைகளிலும் விளக்கப்படம் பார்வையாளர்களைக் கொண்டு செல்கிறது.
விளக்கப்படத்தில் இடம்பெறும் செய்தியாளர்கள் மீரா, சுனீதா, ஷியம்களி, கவிதா நால்வரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அடிக்கடி வன்முறைக்கு ஆளாகியதுடன் மற்றவர்களால் ஒதுக்கவும் பட்டதாகக் கூறினர்.
வர்க்கம், சாதி, பாலினம், இருப்பிடம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டித் தங்களின் வாழ்நாள் முழுதும் பாகுபாட்டுக்கு உட்பட்டவர்கள்.
இதனால், இப்பெண்கள் தங்களின் பெயர்களைக் கூட முழுமையாக வெளியே சொல்வதில்லை. காரணம், பெயரைக் கொண்டு சாதியைக் கண்டறியும் கூட்டம் ஒன்று உள்ளதாம்.
படிப்பை முடிக்காமல் முன்னதாகவே பள்ளியிலிருந்து வெளியேறிவிட்டார்கள் இந்தப் பெண் செய்தியாளர்கள். அதனால், திறன்பேசியைப் பயன்படுத்தச் சிரமப்படுவதை நம்மால் விளக்கப்படத்தில் காண முடிகிறது. விளக்கப்படத்தை வாஷிங்டன் போஸ்ட், நியூ யார்க் டைம்ஸ் போன்ற செய்தி நிறுவனங்கள் புகழ்ந்து தள்ளியுள்ளன.
செய்தி நிறுவனத்தின் யூடியூப் தளம் இதுவரை 10 மில்லியன் முறை பார்வையிடப்பட்டுள்ளது.
பல திரைப்பட விழாக்களில் இப்படம் திரையிடப்பட்டதுடன் விருதுகளையும் குவித்துள்ளது. குறைந்தது 30 விருதுகளை இந்த விளக்கப்படம் பெற்றுவிட்டது.
ஆஸ்கர் விருது நியமனம் பெற்ற முதல் இந்திய விளக்கப்படமும் இது என்பது குறிப்பிடத்தக்கது. செய்தி: ராய்ட்டர்ஸ்,
நியூ யார்க் டைம்ஸ்

