சிங்கப்பூர் சூழலில் சொத்துச் சந்தை பற்றிய ஆழமான புரிதலை ஊக்குவிக்க புத்தாக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளது சிங்கப்பூரின் ஆகப் பெரிய சொத்துச் சந்தை முகவையான ப்ரோப்நெக்ஸ் நிறுவனம். உலகளவில் பிரபலமான 'மோனோபொலி' எனும் விளையாட்டு மூலம் குதூகல கற்றல்
முறையை ப்ரோப்நெக்ஸ் தயாரித்துள்ளது.
விளையாட்டின் தயாரிப்பு நிறுவனமான 'ஹேஸ்புரோ' நிறுவனத்திடம் உரிமம் பெற்று 'மோனோபொலி ப்ரோப்நெக்ஸ் எடிஷன்' எனும் இந்நிறுவனத்திற்கே உரிய பாணியில் விளையாட்டின் சட்டதிட்டங்களை மாற்றியமைத்து அந்த விளையாட்டை உருவாக்கியுள்ளது.
சிங்கப்பூரில் சொத்து விலைகள் ஏறிக்கொண்டே இருக்கும் நிலையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் அறிவித்துள்ள விலைத் தணிப்பு நடவடிக்கைகள், சொத்து வரி விகிதம், கடன்பெறும் திட்டம், வட்டாரத்திற்கு ஏற்ப நிலத்தின் மதிப்பு போன்ற இத்துறை சார்ந்த பல அம்சங்களையும் இந்த விளையாட்டில் இணைத்துள்ளனர்.
இந்த விளையாட்டின் அடிப்படையில் 'ப்ரோப்நெக்ஸ் மோனோபொலி சேம்பியன்ஷிப் 2022' எனும் போட்டியை ஏற்பாடு செய்து மொத்தம் 100 வெற்றியாளர்களுக்கு $308,000 பரிசுத்தொகையை அறிவித்துள்ளது.
முதல்நிலையில் வெற்றி வாகை சூடுபவர் $108,000 ரொக்கப் பணத்துடன் வீடு திரும்புவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ப்ரோப்நெக்ஸ் மோனோபொலி போட்டி இவ்வாண்டு மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை நடைபெறும். ஆர்வமுள்ளவர்கள் http://monopoly.propnex.com/ எனும் இணையத்தளம் மூலம் தற்போது முதல் பதிவு செய்யலாம். நான்கு மாதங்கள் நடைபெறும் இப்போட்டியில் 18 வயதுக்கு மேலான ரசிகர்களும் பயனீட்டாளர்களும் கலந்துகொள்ளலாம்.
ப்ரோப்நெக்ஸின் மோனோபொலி பிரதிநிதிகளுடன் சேர்ந்து, பங்கேற்பாளர்கள் ஏப்ரல் மாதம் முதல் பயிற்சி வகுப்புகளில் ஈடுபடலாம். அல்லது அந்த விளையாட்டுப்பொருளை மேல் கூறப்பட்ட இணையத்தளம் மூலம் வாங்கி பயிற்சி செய்யலாம்.
கூடுதல் செய்தி:
கவின்விழி கதிரொளி

