வரலாற்றில் மறைந்துபோய் மறக்கப்பட்ட இந்திய ஆயாக்களுக்கு லண்டனில் விரைவில் மரியாதை செய்யப்பட உள்ளது.
இந்தியாவில் பணியாற்றிய பிரிட்டிஷ் அரசாங்க அதிகாரிகள், வர்த்தகர்கள் ஆகியோரின் குடும்பங்களில் ஆயிரக்கணக்கான இந்தியப் பெண்கள் ஆயா வேலை செய்தனர்.
குழந்தைகளைப் பார்த்துக்கொண்டு பணிவிடைகள் செய்தனர்; அவர்களை வளர்த்து எடுத்தனர். பிரிட்டிஷ் காரர்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பியபோது பலர் அவர்களுடனேயே பிரிட்டன் சென்றனர்.
அவர்களை நினைவுகூரும் வகையில் லண்டனில் ஆயாக்களுக்கான ஆதரவு இல்லமாக இருந்த ஒரு கட்டடத்தின் வெளியே நீலநிற நினைவுப்பலகை வைக்கப்படவுள்ளது.
கிழக்கு லண்டனில் உள்ள கிங் எட்வர்ட் ரோட்டில் அமைந்திருக்கும் அந்தக் கட்டடம் கடந்த 1900 முதல் 1921 வரை ஆயாக்களுக்கான ஆதரவு இல்லமாக செயல்பட்டது.
கைவிடப்பட்ட ஆயாக்களுக்கு அடைக்கலமாகவும் பயணத்தில் இருந்த ஆயாக்களுக்கு தங்குமிடமாகவும் இருந்தது அந்த பழைய கட்டடம்.
நினைவுப்பலகை வைக்கும் நிகழ்ச்சி இந்த ஆண்டு பிற்பகுதியில் வைக்கப்படும்.
பிரிட்டிஷ் வரலாற்றில் முக்கியமான கட்டடங்களைக் குறிக்க அத்தகைய நீலநிறப் பலகைகள் வைக்கப்படுகின்றன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த அங்கீகாரத்துக்கான முயற்சிகளை முன்னெடுத்து வந்துள்ளார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஃபர்ஹானா மமூஜி.
பிரிட்டனில் பிறந்து வளர்ந்த இவர், கலை வரலாற்றுத் துறையில் படித்து சொத்தபிஸ் நுண்கலை நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
இந்தியாவிலிருந்து ஆயாக்களாக அழைத்துச் செல்லப்பட்ட பெண்கள் தேவை முடிந்தவுடன் நாடு அனுப்பப்பட்டனர் என்று அவர் கூறினார்.
ஆனால் பணமும் போக்கிடமும் இல்லாமல் பலர் கைவிடப்பட்டனர் என்பதே சோக வரலாறு.
ஆயாக்கள் அடித்துத் துன்புறுத்தப்பட்ட சம்பவங்களும் உண்டு என்றார் ஃபர்ஹானா.
பிரிட்டனில் ஆயாக்களுக்கான தேவை 1950களுக்குப் பின்னர் படிப்படியாகக் குறைந்தது.

