முதுமைக்கால மறதி நோய், அதாவது 'டிமென்ஷியா'வால் பாதிக்கப்பட்டவர்களைப் பராமரிப்பது சவால்மிக்கது.
தமது பராமரிப்பில் இருக்கும் முதியவருக்கு 'டிமென்ஷியா' இருந்தால், முதலில் அதைப் பற்றி நன்கு அறிந்திருத்தல் அவசியம். தகவல்களை நன்கு அறிந்துகொண்டு தம்மால் எவ்வாறு சிறந்த பராமரிப்பு அளிக்க முடியும் என்பது தொடர்பில் நியாயமான எதிர்பார்ப்புகளைப் பராமரிப்பாளர் திட்டமிட இயலும்.
சரியான பராமரிப்புத் திட்டத்தைப் பின்பற்றி நன்குக் கவனித்துக்கொள்ள முடியும் என்பதைப் பராமரிப்பாளர் உணரும்போது, சவால்மிக்க தமது பணி சற்று எளிதாக மாறிவிடும்.
குளிக்க அல்லது சாப்பிட மறுத்தல், கத்துதல், இரவு நேரத்தில் தூங்காமல் விழித்திருத்தல் போன்ற பிரச்சினைகளை 'டிமென்ஷியா' நோயாளிகளிடம் வழக்கமாகக் காண முடியும்.
பராமரிப்பாளருக்கு இதுபோன்ற செயல்களைக் கட்டுப்படுத்தச் சிரமமாக இருக்கலாம். அச்செயலை நிறுத்தவும் தடுக்கவும் உடனடித் தீர்வு ஏதுமில்லை.
ஆனால், முதுமைக்கால மறதிநோய் தொடர்பில் ஆதரவு அளிக்க வேண்டுமெனில் ஒருவர் மூன்று முக்கிய அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவற்றில் கவனம் செலுத்தினால் கட்டுப்படுத்த முடியாத 'டிமென்ஷியா' நோயாளிகளின் செயல்களை அடிக்கடி நிகழாமல் பராமரிப்பாளர் பார்த்துக்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.
இதனால், பராமரிப்பாளருக்கு ஏற்படக்கூடிய மனவுளைச்சலும் குறையும்.
இதன்படி 'டிமென்ஷியா' உள்ளவர்களைப் பராமரிப்பது தொடர்பில் மூன்று முக்கிய அம்சங்களை நரம்பியல் நிபுணர்கள் பகிர்ந்துகொள்கின்றனர்.
'டிமென்ஷியா' என்ன
என்பதை அறிந்திருக்க வேண்டும்
முதுமைக்கால மறதிநோயால் மூளையில் மாற்றங்கள் ஏற்படும். அப்போது ஒருவரின் சிந்தனைத் திறன், திட்டமிடும் ஆற்றல், நினைவாற்றல், கருத்துப் பரிமாற்றத் திறன் ஆகியவை பாதிக்கப்படுகின்றன.
இதனால் எரிச்சலடையக்கூடிய 'டிமென்ஷியா' நோயாளி, தனது விருப்பு வெறுப்புகளை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் கத்துவதன் மூலமாகவும் மற்றவர்களிடம் கடுமையாகப் பேசுவதன் மூலமாகவும் தம் உணர்வுகளைத் தெரிவிக்கலாம்.
சத்தத்தால் அதிகமாகப் பாதிக்கப்படுவது, சுவைத்தல் அல்லது நுகர்தலில் மாற்றத்தை உணர்வது போன்றவற்றால் தனக்குப் பிடித்தமான உணவுகளின் மீது நோயாளிக்கு விருப்பம் இல்லாமல் போகலாம்.
மூளை தொடர்பான இதுபோன்ற மாற்றங்களைக் கட்டுப்படுத்த முடியாது. எனினும், நோயாளிகளின் சூழ்நிலையையும் அவர்கள் ஈடுபடும் நடவடிக்கைகளையும் பராமரிப்பாளர்கள் மாற்றி அமைக்கலாம்.
எதிர்பார்ப்புகளை
குறைத்துக்கொள்ளவேண்டும்
முதுமைக்கால மறதிநோய் ஒருவரைத் தாக்குவதற்குமுன் அவர் தம் குடும்பத்திற்காக அயராது உழைத்திருக்கலாம். சுதந்திரமாக இருந்ததுடன் சொந்தக் காலில் நின்றிருக்கலாம். இதையெல்லாம் 'டிமென்ஷியா' நோயாளியின் பராமரிப்பாளர் நினைவில் நிறுத்தவேண்டும்.
முக்கியமான தினங்களை ஞாபகம் வைத்துக்கொள்வது போன்ற செயல்கள் முன்னதாக எளிதாக இருந்திருக்கும். ஆனால் 'டிமென்ஷியா' வந்த நிலையில் அதுவும் சவாலாக மாறியிருக்கும். அதனால், நோயாளி 'முன்புபோல் இல்லை' என்பதைப் பராமரிப்பாளர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எனவே, தற்போது 'டிமென்ஷியா' உள்ளவரின் ஆற்றல் என்ன, விருப்பம் என்ன என்பதைப் பராமரிப்பாளர் கருத்தில் கொள்ளவேண்டும். அதற்கு ஏற்ப, எதிர்பார்ப்புகளைத் திட்டமிடவேண்டும்.
இதனால், முதுமைக்கால மறதிநோயால் அவதியுறுவோரும் அவர்களின் பராமரிப்பாளர்களும் விரக்தி நிலையை அடையாமல் தடுக்க முடியும்.
பராமரிப்பு முறையைத் திட்டமிட வேண்டும்
அன்றாட வேலைகளுடன் ஈடுபாடு மிகுந்த நடவடிக்கைகளையும் இணைத்துத் திட்டமிட்டால் 'டிமென்ஷியா' நோயாளிகளின் மனநிலையைச் சீராக்கலாம்.
அவர்களிடத்தில் அமைதியை ஏற்படுத்தி அவர்களின் தூக்கத்தை மேம்படுத்தலாம். பராமரிப்பாளராலும் ஓய்வெடுக்க முடியும்.
போதுமான ஓய்வு கிடைக்கும் நிலையில் தனது பராமரிப்பு வேலையை வெறுக்கும் சாத்தியமும் குறையும்.
ஒருவருக்கு 'டிமென்ஷியா' இருப்பது உறுதியான உடன், அவரின் பராமரிப்பு முறை தொடர்பில் திட்டமிடல் அவசியம்.
நாளடைவில் மறதிநோய் மேலும் மோசமடைவதை இதுபோன்ற திட்டமிடுதல் குறைக்க உதவும்.

