தொண்டை வலி, விடாத இருமல், களைப்பு. இவற்றுடன் உங்கள் உணவை நுகரவோ சுவைக்கவோ முடியவில்லை. கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் நீங்களும் ஒருவர் என்று உறுதியாகிவிட்டது. இதுபோன்ற சூழலில் அறையில் இருந்தவாறே உணவு விநியோகச் சேவையைப் பயன்படுத்தி எதையாவது சாப்பிட வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றலாம்.
ஆனால், கிருமித்தொற்றிலிருந்து விரைவில் மீள்வதற்கும் மீண்டும் உற்சாகம் பெறுவதற்கும் சிறந்த உணவுத் தெரிவுகள் உண்டு என்கின்றனர் உணவுமுறை நிபுணர்கள்.
சீரான உணவுப் பழக்கம் முக்கியம் என்று உணவுமுறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
"சீரான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிப்பதுடன் முழு தானிங்கள், கொழுப்பில்லாத புரதம், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை கொவிட்-19 நோயாளிகள் தங்களின் உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் சக்தி பெறுவதுடன் விரைவாக தொற்றிலிருந்து மீண்டும் வரலாம்," என்று நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.
உணவைச் சற்று கூடுதல் நேரத்திற்கு வேக வைக்கும்போது அது மிருதுவாகவும் எளிதில் விழுங்கக்கூடியதாகவும் இருக்கும். இதனால், தொண்டை வலியைச் சற்று தணிக்க முடியும். கஞ்சி, மீன், முட்டை, சுண்ட வைத்த இறைச்சி, 'நூடல் சூப்' ஆகியவற்றைச் சாப்பிடலாம்.
அதிக எண்ணெய்யில் பொறிக்கப்பட்ட உணவு, அதிகக் கொழுப்புச் சத்துள்ள உணவு ஆகியவற்றை உட்கொள்ளும்போது அவை இரைப்பை குடல் வழியாக மிக விரைவாகச் சென்றுவிடலாம். இதனால், வயிற்றுப் போக்கு ஏற்படலாம் அல்லது அந்த உணவு வயிற்றிலேயே தங்கி உப்புசம் உண்டாகலாம்.
காரமான உணவில் உள்ள அமில சேர்க்கையும் தொண்டை மற்றும் வயிற்றில் எரிச்சலை உண்டாக்கலாம்.
ஊட்டச்சத்து அதிகம் இல்லாத சாக்லெட்டுகள், மிட்டாய்கள், பனிக்கூழ், நொறுக்குத் தீனி போன்றவற்றையும் தவிர்ப்பது சிறப்பு.
நோயிலிருந்து மீள்வதற்கு உடலில் ஊட்டச்சத்து தேவை என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஒரு சிலர் கிருமித்தொற்று காரணத்தால் சுவைக்கும் ஆற்றலை இழந்துவிடுவதால் உணவில் உப்பை அதிகமாகச் சேர்த்துக்கொள்கின்றனர்.
ஆனால் இது ரத்த அழுத்தத்தை உயர்த்திவிடலாம். தண்ணீர் பருகுவது சிரமமாக இருந்தால் அதில் எலுமிச்சை, பெர்ரி பழம், புதினா இலை போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். பதப்படுத்தப்பட்ட இறைச்சி, மிளகாய் சேர்க்கப்பட்ட காரமான உணவு வகைகள், மதுபானம் போன்றவற்றைத் தவிர்க்குமாறு நிபுணர்கள் கூறுகின்றனர்.

