தங்களுடைய உடலின் தன்மைக்கேற்பவும், காலநிலையைப் பொறுத்தும் வாசனைத் திரவியங்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தவேண்டும்.
வெயில் காலத்தில் ெமன்மை யான வாசனைத் திரவியங்களையும் குளிர்காலங்களில் அதிக வாசனை தரக்கூடிய திரவியங்களையும் பயன்படுத்த வேண்டும்.
சந்தனம் அல்லது மஞ்சளின் வாசத்தை நுகரும்போது, உங்கள் மனம் தளர்வடையும். லாவெண்டர், எலுமிச்சை போன்ற வாசனைகள் உங்களின் செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்கும்.
இதேபோல், மன அழுத்தத்தை தணிக்கக்கூடிய, புத்துணர்ச்சியூட்டும் ஐந்து வாசனைகளும் உள்ளன.
சந்தனம்: சந்தனத்தின் மணம் அமைதியை ஊக்குவிப்பதால், மன அழுத்தம் குறைக்கிறது. சிறந்த தூக்கத்திற்கும் வழிவகுக்கிறது.
எலுமிச்சை: எலுமிச்சையின் 'சிட்ரஸ்' வாசனை உற்சாகமாகவும் மனதை அமைதியாகவும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கவும் உதவும் ஒரு வாசமாகும்.
மல்லிகைப்பூ: மல்லிகையின் வாசனை மன அழுத்ததைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. மனதைச் சீராக்குவதுடன், உறக்கத்தைத் தூண்டுவதாகவும் நம்பப்படுகிறது.
வெட்டிவேர்: வெட்டிேவரின் வாசனை நம்மை மிகவும் ஆழமாக சமநிலைப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைக்கிறது. இந்த வாசனை நல்ல தூக்கத்தையும் ஓய்வையும் ஊக்குவிக்கும்.
ரோஜா: உலகின் மிகவும் பிரபலமான வாசனைகளில் ஒன்றான ரோஜா, மன அழுத்தத்தை நீக்கும் வாசனையை வெளிப்படுத்துவதோடு பதற்றத்தை எதிர்த்துப் போராடவும் மனது, உடலை ஓய்வாக வைக்கவும் உதவுகிறது.
இந்த வாசனைகள் அனைத்தை யும் நுகர்வதை விட, அவைகளில் ஏதேனும் ஒன்றின் மத்தியில் அமர்ந்து தியானம் செய்யும்போது இந்த நறுமணங்கள் இன்னும் திறம்படச் செயல்படும்.
இதைத் தான் அரோமாதெரபி என்கிறார்கள்.
சில வாசனைத் திரவியங்கள் அதிக வாசனை கொண்டவையாக இருக்கும். பலருக்கு அதீத வாசனை பிடிக்காமல் தலைச்சுற்றல், தலைவலி போன்றவை வரும். அப்படியான வாசனைத் திரவியங்களைத் தவிர்த்துவிட வேண்டும்.
வாசனைத் திரவியங்களைத் தேர்ந்தெடுப்பது குறித்து மீரா காந்தி வாசனை திரவிய நிறுவனர் ரிட்டிகா ஜடின் அஹுஜா சில ஆலோசனைகளைக் கூறியுள்ளார்.
கடைக்கு வெளியே வாசனையைப் பரிசோதிக்க மறக்கவேண்டாம்.
கடையின் குளிர் சாதன வசதியில் வாசனையின் தரம் தெரியாது. எனவே, வெளியில் சென்று சோதித்தால் உண்மையான மணம் தெரியும்.
இலகுவான வாசனையை விரும்பினால், பூக்களின் நறுமணத்தை எடுத்துக்கொள்ளலாம். புதினா அல்லது 'சிட்ரஸ்' நறுமணங்களையும் கூடத் தேர்வு செய்யலாம். இவை புத்துணர்ச்சியூட்டும். அதிக நறுமணத்தை விரும்பினால் சாண்டல்வுட் (சந்தனம்) போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
வாசனைப் பொருட்களை உபயோகிக்கும் போது முதலில் மணிக்கட்டு, இதயத்தின் நடுப்பகுதி, முழங்கை, காது பின்பகுதி, முழங்கால்களுக்குப் பின்னால், முழங்கையின் மடிப்புகள் போன்ற பகுதிகளில் லேசாக தடவலாம். வாசனை ஆளைத் தூக்கும்.
சிறு பஞ்சுகளில் வாசனை திரவியத்தை தெளித்து உடைகளில் தடவிக் கொள்ளலாம்.
எந்தவொரு புது வகை வாசனையையும் முதன்முதலாக உபயோகிக்கும் போது அதை மணிக்கட்டு பகுதியில் தெளித்து இரண்டு நிமிடங்கள் விட்டுப் பாருங்கள்.
எரிச்சல், தோல் ஒவ்வாமை ஏதும் இல்லை எனில் அதனை கவலைப்படாமல் உபயோகிக்கலாம். வாசனைத் திரவியத்தை அதிகமாக போட்டுக்கொள்ளக் கூடாது. நகைகள், ஆடைகளில் பயன்படுத்தவும் கூடாது என்கிறார் ரிட்டிகா ஜடின் அஹுஜா.
தகவல்: இந்தியன் எக்ஸ்பிரஸ்
படம்: ஊடகம்

