ஆண்டொன்று போனால் வயதொன்று ஏறும். வயது ஏற ஏற மூப்பு உடலை எட்டிப் பார்க்கிறது.
இந்த முதுைமயில் இருந்து தப்பித்து என்றும் இளமையாக, மார்க்கண்டேயனாக வாழத்தான் அனைவரது மனமும் அலைபாயும். ஆனால், வாழ்க்கையில் ஒருநாள் முதுமை வரத்தான் செய்யும்.
இருப்பினும், எப்போதும் மன மகிழ்ச்சியுடன், மனதை அமைதியாக வைத்துக்கொண்டு, ஆரோக்கியமான உணவு வகைகளைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் முதுமையைப் பத்தாண்டுகள் தள்ளிப்போடலாம் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ஏமி ஷா.
இவர், தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் நீண்டகாலம் இளமையாக வாழ உதவும் சில குறிப்புகளையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.
சத்தான, இயற்கை
உணவுக்கு முக்கியத்துவம்
தினசரி உணவில் அதிக சத்தான, இயற்கை உணவைச் சேர்க்கும்படி ஏமி ஷா பரிந்துரைக்கிறார்.
பயறு வகைகள்(legumes), முழு தானியங்கள், விதைகள், பருப்புகள் (nuts) என மூவிதமான உணவுகளை அன்றாட உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளும்படி கூறுகிறார்.
இந்த உணவுப் பொருள்களில் அதிக ஊட்டச்சத்து நிரம்பியுள்ளதால் உடலின் உள் உறுப்புகள் நன்றாகச் செயல்பட உதவும் என்றும் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைத்து, ஆயுளையும் அதிகரிக்க பேருதவி புரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
குறைந்தளவு சிவப்பு
இறைச்சி பயன்பாடு
சிவப்பு இறைச்சி, பதப்படுத்தப் பட்ட உணவு வகைகளை உட்கொள்வதைக் குறைத்துக்கொள்ளும்படியும் அறிவுறுத்தி உள்ள டாக்டர் ஏமி, இவற்றை வாரத்திற்கு ஐந்து முறைக்கும் குறைவாகவே உட்கொள்ளவும் பரிந்துரைக்கிறார்.
சிவப்பு இறைச்சியில் ஆரோக்கியமற்ற கொழுப்பு நிறைந்துள்ளது. இதனை அதிக அளவில் உட்கொள்வதால் இதயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
அதேபோல், பதப்படுத்தப்பட்ட இறைச்சி குடல் மற்றும் வயிற்றுப் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கிறார்.
சூரியக் குளியல் அவசியம்
சூரிய ஒளி மூலம் வைட்டமின் டி சத்து கிடைப்பதுடன், ஒருவரது மன அழுத்தம் குறைந்து மனநிலை மேம்படவும் பெரிதும் உதவுகிறது. எனவே, தினமும் ஒரு சில மணி நேரங்களாவது வெளியில் குளிர்காய்ந்து வருவது முக்கியம்.
உடலில் கேல்ஷியம், பாஸ்பேட் அளவைக் கட்டுப்படுத்தவும் எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் வைட்டமின் டி சத்து முக்கியம் என்பதால், அரை மணி நேர சூரியக் குளியல் முக்கியம் என்கிறார்.
13 மணி நேர உண்ணாவிரதம்
ஒரே இரவில் 13 மணிநேரம் அல்லது அதற்கு மேலும் உண்ணா விரதம் இருக்க முயற்சி செய்யுங்கள். இப்படி ஓர் இரவில் மட்டும் உண்ணாவிரதம் இருப்பதன் மூலம், செரிமானத்தைக் காட்டிலும் உள் உறுப்புகள் நன்றாகச் செயல்பட உதவுகிறது. இது நாள்பட்ட நோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கும். இதனால், இன்னும் பல ஆண்டுகள் வாழ்நாள் நீடிக்கும்.
நாளும் 10,000 அடிகள்
உடற்பயிற்சிக் கூடத்துக்கு அல்லது மற்ற எந்தவொரு தீவிர உடற்பயிற்சிகளையும் நீங்கள் மேற்கொள்ள விரும்பாவிடிலும் ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடப்பது உங்களை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவும்.
முடிந்தவர்கள் மாடிப்படிகளில் ஏறி இறங்கும் பயிற்சிகளிலும் ஈடுபடலாம்.
மன அழுத்தம் குறைய
தனிப்பட்ட அல்லது உங்களது அன்றாட அலுவலகப் பணிகள் தொடர்பாக எற்படும் மன அழுத்தம் உங்கள் உடல்நலனை, மகிழ்ச்சியான மனநிலையைப் பாதிக்கலாம்.
உங்களது மன அழுத்தம் குறையவும் மனதை அமைதிப்படுத்தவும் புத்துணர்ச்சி பெறச் செய்யவும் ஒரு சில நடவடிக்கைகளைத் தொடரத் திட்டமிடுங்கள்.
நீங்கள் புத்தகங்களைப் படிக்கவோ, இயற்கையுடன் இயைந்து நடக்கவோ, தியானம் செய்வதிலோ தினமும் தொடர்ந்து ஈடுபட முயற்சி செய்யவும்.
இந்த வாழ்க்கை முறை மாற்றங்கள் அனைத்தும் ஒருவரது வாழ்நாளில் குறைந்தது 10 ஆண்டுகள் முதுமையைத் தாமதப்படுத்த உதவும் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ஏமி ஷா.
தகவல்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

