ரத்த நன்கொடை செலுத்த விரும்புவோர் இந்த வாய்ப்பினை சாங்கி விமான நிலையத்தில் நாளை பெற முடியும்.
சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆதரவில் சாங்கி விமான நிலைய பொழுதுபோக்கு மன்றத்தின் ஏற்பாட்டில் இம்மாதம் 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ரத்த நன்கொடை திரட்டு நடைபெறும்.
சாங்கி விமான நிலைய முனையம் 2ன் மூன்றாம் தளத்தில் உள்ள சாங்கி விமான நிலைய பொழுதுபோக்கு மன்றத்தில் நடைபெறும் ரத்த நன்கொடைத் திரட்டில் பங்கேற்க செஞ்சிலுவைச் சங்கம் வரவேற்கிறது.
நன்கொடை செலுத்த முன்வருவோர் 62200183 என்ற எண்ணை அழைத்து முன்பதிவு செய்யவேண்டும். நன்கொடை செலுத்த வரும்போது அனைவரும் தங்கள் அடையாள அட்டை/வாகனமோட்டும் உரிம அட்டை/மாணவர் அட்டை/ஒர்க் பெர்மிட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைக் கொண்டு வரவேண்டும்.
தற்போதைய கொவிட்-19 கிருமித்தொற்றுச் சூழலால் நடமாட்டக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும். நன்கொடையாளர்கள் கட்டங்கட்டமாக அனுமதிக்கப்படுவர்.
விபத்து, அறுவை சிகிச்சை மேற்கொள்வோர், இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைப் பாதிக்கக்கூடிய ஒரு வகைப் புற்றுநோய் மற்றும் மரபு வழி ஏற்படும் இரத்த பிரச்சினை, இரத்தப் போக்கு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிரைக் காப்பதற்கு இரத்தம் தேவைப்படுகிறது.
நாம் நன்கொடையாக அளிக்கும் ஓர் அலகு (யூனிட்) அளவு இரத்தம் மூன்று உயிர்களைக் காப்பாற்றக் கூடியது.
நாம் அளிக்கும் இரத்த நன்கொடை, உயிருக்குப் போராடும் எண்ணற்ற நோயாளிகளின் வாழ்வை நீட்டிக்க முடியும்.
சிங்கப்பூரைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரத்திற்கு 15 அலகு அளவு இரத்தம் பயன்படுத்தப்படுகிறது.
இரத்த மாற்றம் செய்துகொள்வோருக்கு மட்டும் நாள் ஒன்றுக்கு 400 அலகு அளவு இரத்தம் தேவைப்படுகிறது என்றால் ஓர் ஆண்டுக்கு 120,000 அலகு அளவு இரத்தம் நமக்குத் தேவைப்படுகிறது.
ஆண்டுதோறும் சுமார் 30,000 சிங்கப்பூரர்களுக்கு இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை தேவைப்படுவதாக செஞ்சிலுவைச் சங்கம் அண்மையில் தெரிவித்தது. எனவே, நமது இரத்த வங்கியில் எப்போதும் இரத்தம் இருப்பில் இருக்கவேண்டும். 16 வயதுக்கும் 25 வயதுக்கும் உட்பட்ட இளையர்கள் குறைவான எண்ணிக்கையில் இரத்த தானம் செய்வதாகச் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.