கி.ஜனார்த்தனன்
சிங்கப்பூர் கலை வாரமான இந்த வாரத்தின் தொடக்கத்தில் 'டிபிடி' (TPD) எனப்படும் தஞ்சோங் பகார் டிஸ்ட்ரிபார்க்கைப் பற்றி ஊரெல்லாம் ஒரே பேச்சாக இருந்தது. கவனமெல்லாம் அங்கு திரும்பும் நேரத்தில், பச்சை பசுமையான சூழலில் தற்போது உள்ள 'கில்மன் பேரக்ஸ்' புறக்கணிக்கப்படுமா என்பது கலை ஆர்வலர்களின் முக்கிய கேள்வியாக உள்ளது.
அலெக்சாண்டிரா சாலைக்கு அருகிலுள்ள இந்தக் கலைக்குழு மத்தின் வருங்காலத்தைப் பற்றி பலரும் வினவுகின்றனர்.
ஜப்பானியப் படையெடுப்புக் காலத்தில் பிரிட்டிஷ் படையின் ராணுவ முகாமாகச் செயல்பட்டு வந்த 'கில்மன் பேரக்ஸ்', 2012ஆம் ஆண்டில் கலை மையமாகத் தொடக்கம் கண்டது. தமிழ் கலாசார நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு கலைப்படைப்புகளுக்கும் இது மேடை வழங்கி வருகிறது. சிங்கப்பூரின் தென்பகுதியில் கிட்டத்தட்ட பத்து கிலோமீட்டர் தொலைவுக்கு நீளும் இயற்கைப்பகுதிக்கு அருகே அமைந்துள்ள இந்த இடத்திற்கு குத்தகையாளர்களை வரவேற்பதாக இந்த இடத்தை நிர்வகிக்கும் சிங்கப்பூர் நில ஆணையம் தெரிவித்தது.
மிதிவண்டி ஓட்டுபவர்களுக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கும் இடையே இந்த இடம் மிகவும் பிரபலமாக இருப்பதாகவும் ஆணை யம் குறிப்பிட்டது.
ஆயினும், இங்குள்ள நீண்ட கால குத்தகையாளர்களின் ஆவல் குறைந்துள்ளது. அங்குள்ள 17 கலைக்கூடங்களில் ஐந்து, தங்களது குத்தகையை நீட்டிக்கப்போவதில்லை என அறிவித்தன.
குறைந்த வருகையாளர்கள், சரிந்த விற்பனை போன்ற காரணங்களால் சான்+ஓரி கான்டெம்ப்ரரி, சுல்லிவன்+ஸ்டிரம்ஃப் போன்ற கலைக் கூடங்கள் 2020ல் வெளியேறிவிட்டன.
கடந்தாண்டு மார்ச் மாதத்தில் பெரிதாக இருந்த புளோக் 43ன் குத்தகையாளரான என்டியு தற்கால கலை நிலையம் தனது கலைக் கூடத்தை மூடி வெளியேறியது. முன்பு உணவகமாகவும் கேளிக்கைக் கூடமாகவும் செயல்பட்ட டிம்பர் கில்மேன் இருந்த 'புளோக் 9ஏ', கலைத்துறையில் இல்லாத மற்ற வர்த்தகங்களுக்கு விடப்பட்டது. ஆனால், அந்த இடமும் தொடர்ந்து காலியாக உள்ளது.
"மக்கள் வருகையால் களை கட்டிய ஓர் இடம் இப்படி காலியாக இருப்பதைக் கண்டு வருத்தம் அடைகிறோம்," என்று என்டியு கலை நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்தக் கலை மையத்தில் தற்போதுள்ள ஆறு உணவு, பானத் துறை குத்தகையாளர்கள், தாங்கள் இருக்கும் இடத்திற்கு மீண்டும் விண்ணப்பிக்கும்படி கேட்கப்பட்டுள்ளனர். இது அவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
"கலை மையம் என அறிவிக்கப்படும் ஓர் இடத்தில் கலைக்கூடங்கள் அதிகம் இருக்கவேண்டும் என்பது சிலரின் கருத்து. உணவகங்கள் உள்ளிட்ட வாழ்வியல் வர்த்தகங்கள் இருப்பது நல்லது என்றாலும் கவனம் கலை மீதும் கலைக்கூடங்களின் மீதும் இருக்கவேண்டும்," என்றார் 'சுந்தரம் தாகூர் கலைக்கூட'த்தின் நிறுவனர் சுந்தரம் தாகூர். தமது குத்தகையை ஐந்தாண்டுகளுக்கு நீட்டிப்பதாகவும் அவர் கூறினார்.

