தமிழுலகத்தின் மூத்த எழுத்தாளரும் சமூக சேவகருமான டாக்டர் ஹிமானா சையத், உடல்நலமின்றி 21 பிப்ரவரி 2022 அன்று தமது 75வது வயதில் சென்னையில் காலமானார். அவர் ஆற்றிய தமிழ் இலக்கியப் பணிகளையும் சமூகப்
பணிகளையும் நினைவுகூரும் வகையில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) சென்ற ஞாயிற்றுக்கிழமை (13 மார்ச்), இணையம் வழியாக அன்னாரின் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தியது.
இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர் முனைவர் மு.அ.காதர், சங்கத்தின் செயலாளர் கணிதப் பேராசிரியர் திரு. அமானுல்லாஹ், பென்கூலன் பள்ளிவாசலின் நிர்வாகக் குழுத்தலைவர் மு.முஹம்மது ரஃபீக், 'செம்மொழி' இதழாசிரியர் திரு. மு. இலியாஸ், சிங்கப்பூர் முஸ்லிம் லீக் சமூக நல்லிணக்க அமைப்பின் தலைவர் 'புதிய நிலா' மு. ஜஹாங்கீர், மலேசியா நாணய மாற்று வணிகர்கள் சங்கத்தின் தலைவர் முனைவர் மு. முஹம்மது சுஐபு, சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் துணைத்
தலைவர் திரு மு.அ.மசூது, சிங்கப்பூர் ஜாமியா அறநிறுவனத்தின் துணைத்தலைவர் முனைவர் ஹெச். எம்.சலீம், மீடியாகார்ப் சிங்கப்பூர்த் தொலைக்காட்சி தமிழ்ச்செய்தி மற்றும் நடப்பு விவகாரப் பிரிவு மூத்த தயாரிப்பாளர் திரு கே.ஹெச். எம். ஸதக்கத்துல்லாஹ் ஆகியோர் டாக்டர் ஹிமானா சையத் ஆற்றிய தமிழ்ப்பணிகளையும் சமூகப்பணி
களையும் நினைவுகூர்ந்தனர்.
ஜமால் முஹம்மது கல்லூரியின் தாளாளர், செயலர் டாக்டர் காஜா நஜிமுதீன், பொருளாளர் ஹாஜி ஜமால் முஹம்மது, கல்லூரி முதல்வர் முனைவர் இஸ்மாயில் மொகிதீன் ஆகியோர் வழங்கிய இரங்கல் செய்திகள் இந்நிகழ்வில் வாசிக்கப்பட்டன.
டாக்டர் ஹிமானா சையத்தின் புதல்வர் திரு அப்துல் கனி ஏற்புரை வழங்க, பென்கூலன் பள்ளிவாசல் இமாம் மௌலவி கலீல் அஹ்மது ஹசனியின் இறைப் பிரார்த்தனையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. பல்வேறு சமூகத் தலைவர்களும் தமிழ் ஆர்வலர்களும் பேராசிரியர்களும் பொதுமக்களும் இதில் கலந்துகொண்டனர்.
தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டையைச் சேர்ந்த ஹிமானா சையத்தின் இயற்பெயர் சையத் இபுராஹிம். மருத்துவராகப் பணியாற்றிய இவர், 1964ல் 'மறுமலர்ச்சி' வார இதழில் எழுதத் தொடங்கியதிலிருந்து, நூற்றுக்கணக்கான சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் பல நூல்களைப் படைத்தார்.
'நர்கீஸ்' மாத இதழின் கௌரவ ஆசிரியராகவும் பல ஆண்டுகள் பணியாற்றினார். 'மல்லாரி பதிப்பகம்' என்ற தமிழ் இலக்கியப் பதிப்பகம் ஒன்றையும் இவர் நடத்தினார்.
பல்கலைக்கழகங்களில் பலர் இவரது ஆக்கங்களில் எம்.ஃபில் பட்டம் பெற்றுள்ளனர். இவரது 'ருசி' சிறுகதைத்தொகுப்பு கேரளப் பல்
கலைக்கழகத்தில் 1992 முதல் 1996 வரை முதுகலை மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. மதுரை காமராசர் பல்கலைக்
கழக மாணவர் செல்வி சண்முக
வனம் இவரது நாவல்களை ஆராய்ச்சி செய்து பி.எச்டி. டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
மருத்துவம், இலக்கியம், கல்வி, சமயம், தன்முனைப்பு என்ற பல ஆய்வரங்கங்களில் கட்டுரைகள் படைத்தவர். சிங்கப்பூர் தமிழ்முரசு, வானொலி, தொலைக்காட்சி நிகழ்வுகளில் பங்களிப்புச் செய்ததோடு 'தமிழ் மாமணி', 'பாரத் ஜோதி', 'சிறந்த குடிமகன்' போன்ற விருதுகளைப் பெற்றவர் டாக்டர் ஹிமானா சையத்.
டாக்டர் ஹிமானா சையத் - மறைந்த எழுத்தாளரின் மறையாத புகழ்