வாரந்தோறும் உடலை அதிகம் வருத்திக்கொள்ளாதபடி 150 நிமிடங்களுக்காவது உடற்பயிற்சி செய்யவேண்டும் அல்லது 75 நிமிடங்களுக்குத் தீவிர உடற்பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று சில சுகாதார வல்லுநர்கள் ஆலோசனை வழங்குவதுண்டு. அந்த வகையில் நீச்சல் ஒரு சிறந்த நடவடிக்கை என்று பரிந்துரைக்கப்படுகிறது.
நீந்தும்போது முட்டி, கணுக்கால் போன்ற பகுதிகள் பாதிப்படைவதற்கான சாத்தியம் குறைவு. மெதுவோட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும்போது இத்தகைய பிரச்சினைகள் எழலாம்.
நீச்சலில் பல நன்மைகள் உள்ளன. நீச்சல், உடல் முழுவதற்கும் பயிற்சி தருகிறது. உடலை அதிகம் வருத்தாமல் இதயத் துடிப்பை அதிகரிக்கக்கூடியது.
நீச்சல், உடலின் தசைகளை வலுப்படுத்தும். வலியையும் சிரமங்களையும் தாங்கிக்கொள்ளும் உடலின் ஆற்றலை வளர்க்கும்.
தசைகள் வலுவடைவதோடு 'கார்டியோவெஸ்கியுலர்' எனும் உடலுக்கு ரத்தம் அனுப்பப்படும் முறையை வலுப்படுத்தவும் நீச்சல் உதவும். இதன் மூலம் உடல் எடையைக் குறைக்கமுடியும்.
காயமடைந்தவர்கள், மூட்டுவாதம் உள்ளவர்கள் போன்றோருக்கு நீச்சல் அபாயம் அதிகம் விளைவிக்காத உடற்பயிற்சி என்றும் கூறப்படுகிறது. சில வேளைகளில் உடலில் தசை, எலும்பு சம்பந்தப்பட்ட காயம் ஏதேனும் இருந்தால் வலியைக் குறைக்க நீச்சல் உதவலாம்.
ஆஸ்துமா எனும் மூச்சுப் பிரச்சினை நோய் இருப்பவர்களுக்கு நீச்சல் நல்லதோர் உடற்பயிற்சி. நீந்தும்போது நீருக்குள்ளேயும் வெளியேயும் சரிவர மூச்சுவிடவேண்டும். இது, ஆஸ்துமா உள்ளவர்களுக்கு உதவியாக இருக்கும்.
மேலும், நுரையீரல் கொள்ளளவை மேம்படுத்தவும் நீச்சல் உகந்தது.
நீச்சல் இரவில் அமைதியான தூக்கத்திற்குக் கைகொடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே அடிக்கடி உடற்பயிற்சி செய்வது இரவில் அமைதியான தூக்கத்திற்கு வழிவகுப்பதாக சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
நீச்சல் நமது உணர்வுகளுக்கு உயிரூட்டவும் உதவுகிறது. ஓர் ஆய்வில் மறதிநோய் உள்ள சிலர் 12 வாரங்களுக்கு நீச்சல் உட்பட நீர் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். அதற்குப் பிறகு அவர்களின் உணர்வுகள் புத்துயிர் பெற்றது அந்த ஆய்வின் முடிவுகளின் மூலம் தெரியவந்தது.
நீச்சல் மனவுளைச்சலைக் கையாளவும் வகைசெய்கிறது. தைவானில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் 101 பேர் பங்கேற்றனர். அவர்களின் 44 பேர் துரிதமான வாழ்க்கைமுறையால் மனவுளைச்சலுக்கு ஆளாகியிருந்தனர். நீச்சலில் ஈடுபட்ட பிறகு அந்த எண்ணிக்கை எட்டுக்குக் குறைந்தது.
இத்தகைய பல நன்மைகளை நீச்சல் வழங்குவதாகப் பல வல்லுநர்கள் கூறுகின்றனர். https://www.healthline.com/ இணையத்தளத்தில் இடம்பெற்ற தகவல்களைக் கொண்டு இந்த விவரங்கள் பகிரப்பட்டுள்ளன. எதற்கும் மருத்துவர்களின் ஆலோசனையைக் கேட்பது நல்லது.

