சீன, ஜப்பானிய, தமிழ் மொழிகளின் காதல் கவிதைகளுக்கிடையே உள்ள ஒற்றுமையையும் ஆழத்தையும் ஆராயவுள்ள உரையாடல் வரும் 26ஆம் தேதி 'ஸூம்' தளத்தில் நடைபெறவுள்ளது. நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியர் குவொக் கியென் வூனுடன் (படம்), 'உட்புற நிலப்பரப்புகள், கலாசார ஆய்வுகள்: ஆர்வம், பல்வேறு சிந்தனைகளை ஏற்றுக்கொள்வது, இன்பம்' என்ற தலைப்பில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையமும் தேசிய நூலக வாரியமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
இவ்வுரையாடலை இணைப் பேராசிரியர் சித்ரா சங்கரன் வழிநடத்துவார்.
பல கலாசாரங்களைப் பற்றித் தெரிந்துகொள்வது எவ்வாறு அவற்றுக்கிடையிலான புரிதலை மேம்படுத்துகிறது என்பதையும் இவ்வுரையாடல் ஆராயும்.
கவிஞர் ஏ.கே.ராமானுஜனின் 'இன்டீரியர் லேண்ட்ஸ்கேப்: கிளாசிக்கல் தமிழ் லவ் போயம்ஸ்' எனும் காதல் கவிதை நூலும் சிங்கப்பூர் பல கலாசார மேடை நாடக கல்விக் கழகம், சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம் ஆகியவற்றின் படைப்புகளுமே தமக்கு ஊக்கமளித்ததாகப் பேராசிரியர் குவொக் கியென் வூன் கூறினார்.
பல்லின சமுதாயத்தைப் பற்றித் தமக்கு இருக்கும் முக்கிய வினாக்களுக்கான விடைகளை அறிய முயல்வதாக அவர் தெரிவித்தார்.
"பிற மொழியில் எழுதுபவரின் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்துகொள்ள என்ன செய்யவேண்டும்? மொழிபெயர்ப்பு என்பது மனிதர்கள் பொதுவாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் அடங்குவதுதானா, அது என்றும் முழுமையடையாத பிழைகள் உள்ள ஒன்றுதானா?" போன்ற கேள்விகள் இவர் மனத்தில் உள்ளன.
பேராசிரியர் குவொக் கியென் வூன் ஆசிய நவீனத்துவம், மனநலம் உள்ளிட்ட அம்சங்களை ஆராய்வதிலும் கற்பிப்பதிலும் ஆர்வம் உள்ளவர்.
மரபுடைமை, கலைகள் போன்றவற்றில் அதிக நாட்டம் கொண்டவர். கலைகளைப் பொறுத்தவரை குறிப்பாக மேடை நாடகம், இலக்கியம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர்.
பலகலாசார நாடகப் பள்ளி, தேசிய கலை மன்றம், தேசிய மரபுடைமைக் கழகம், சிங்கப்பூர் மரபுடைமைச் சங்கம், டெமெங்காங் ஆர்டிஸ்ட்-இன்-ரெசிடன்ஸ் போன்றவற்றின் நிர்வாகக் குழுக்களில் குவொக் கியென் வூன் சேவையாற்றியுள்ளார்.
இந்த உரையாடலை வழிநடத்தும் இணைப் பேராசிரியர் சித்ரா சங்கரன், தேசிய பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழி, இலக்கியப் பிரிவின் இடைக்கால தலைவராகப் பணியாற்றுகிறார். அவர், ஆசியான் இலக்கிய, சுற்றுச்சூழல் ஆய்வுக்கான கழகத்தின் தலைவரும் 'ஜர்னல் ஆஃப் சவுத்ஈஸ்ட்ஏஷியன் இக்கோகிரிட்டிசிசம்' எனும் சுற்றுச்சூழல் இலக்கிய சஞ்சிகையின் தலைமை ஆசிரியரும் ஆவார்.
https://us02web.zoom.us/j/88909116404 எனும் ஸூம் முகவரியில் வரும் 26ஆம் தேதி மாலை ஐந்திலிருந்து 6.30 மணி வரை உரையாடல் நடைபெறும்.
கவின்விழி கதிரொளி

