கர்ப்ப காலத்தில் மனஅழுத்தம், கோபம், பயம், பதற்றம், குழப்பம் போன்ற உணர்வுகள் பெண்களுக்கு ஏற்படும். தகுந்த ஆலோசனைகள் பெறுவதன் மூலம் அவற்றில் இருந்து வெளிவர முடியும்.
கர்ப்ப காலம் பெண்களின் வாழ்வில் மகிழ்ச்சியான, உற்சாகமான தருணமாகும். அதேசமயத்தில் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள், தங்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளால், கர்ப்ப காலத்தில் மனஅழுத்தம், கோபம், பயம், பதற்றம், குழப்பம் போன்ற உணர்வுகள் பெண்களுக்கு ஏற்படுவது உண்டு.
தமிழகத்தின் வேலூரைச் சேர்ந்தவர் அனிதா பாரதி. ரசாயன பொறியியல் துறையில் பட்டப்படிப்பை முடித்து இருக்கிறார். பத்து ஆண்டு காலம் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த அவரது வாழ்க்கை, முதல் குழந்தையை கருவில் சுமந்தபோது மாறியது. கர்ப்ப காலத்தில் குழந்தை பிறப்பு, குழந்தை வளர்ப்பு பற்றி தெரிந்துகொள்வதற்காக தனது தேடலைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து அவர் அறிந்துகொண்ட பல விஷயங்கள் அவரை ஆச்சரியப்படுத்தின.
அவற்றை தம்மைப் போன்ற மற்ற பெண்களுக்கும் தெரியப்படுத்துவதற்காக குழந்தை பிறப்பு பயிற்சியாளருக்கான படிப்பை அனிதா முடித்தார். 2018ஆம் ஆண்டு மையம் ஒன்றை அவர் தொடங்கினார். அதன் மூலம் கர்ப்பிணிகளுக்கும் புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும் குழந்தை பிறப்பு மற்றும் குழந்தை வளர்ப்பைப் பற்றி கற்பிக்கவும் ஊக்கம் கொடுக்கவும் ஆரம்பித்தார்.
இதுவரை அவரது வழிகாட்டுதல் மூலம் பலர் பயனடைந்துள்ளனர். இதுகுறித்த தனது அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறார் அனிதா பாரதி.
"இயற்கையான முறையில் தாய்மை அடைவது பற்றி பெண்களுக்கு விரிவான விளக்கங்களை நான் வழங்குகிறேன். பெண்கள் இயற்கையான முறையில் மகப்பேறு பெற வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். கர்ப்ப காலம் மற்றும் பிரசவம் தொடர்பான பிரச்சினைகளுக்கு பதற்றம் அடையாமல் தீர்வுகாண்பது பற்றி அறிவுறுத்துகிறேன். தாய்மையடைந்த பெண்கள் மூன்றாவது மாதம் முதல் எட்டாவது மாதம் வரை எவ்வாறு செயல்பட வேண்டும்? கர்ப்ப காலத்தில் என்னென்ன உணவுகளைச் சாப்பிட வேண்டும்? கருவை சுமக்கும் காலத்தில் மனநிலையை எவ்வாறு வைத்துக்கொள்ள வேண்டும்? கர்ப்பிணியின் செயல்களால் கருவில் இருக்கும் குழந்தை பெறும் நன்மை, தீமைகள் என்ன? கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய ஆசனங்கள் மற்றும் பயிற்சிகள் எவை? பிரசவம் எளிதாக நடைபெற என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றியும் கற்றுக்கொடுக்கிறேன்.
"குழந்தை வளர்ப்பு என்பது அற்புதமான கலை. அதை நாம் எப்படி கையாள வேண்டும்? அதாவது எப்படி தாய்ப்பால் கொடுக்க வேண்டும், தாய்ப்பால் போதுமான அளவு சுரக்க என்ன செய்ய வேண்டும்? குழந்தைகளுக்குத் தேவையான சத்தான உணவு முறைகள், கற்பித்தல் முறைகள், குழந்தைகளின் எண்ணவோட்டம் பற்றி அறியவும் பெற்றோருக்கு கற்றுக்கொடுக்கிறேன். குழந்தை பிறந்தது முதல் 10 வயது ஆகும் வரை, நல்ல முறையில் வளர்க்க என்னென்ன செய்ய வேண்டும்?" என ஆலோசனை அளிக்கிறேன், என்றார் அனிதா.

