வயதான பெற்றோரையும் பார்த்துக்கொள்ள வேண்டும்; இளம் பிள்ளைகளையும் கவனித்துக்கொள்ள வேண்டும். இவ்விரண்டு தலைமுறைகளுக்கும் இடையே உள்ளவர்களை ஆங்கிலத்தில் 'சேண்ட்விச்ட்' தலைமுறை என்பார்கள்.
இக்குறிப்பிட்ட தலைமுறையினர் 35 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களாக இருப்பர். வேலை செய்துகொண்டே தங்களின் பிள்ளைகளின் செலவுகளையும் தங்களின் வயதான பெற்றோரின் செலவுகளையும் பார்த்துக்கொள்வது இவர்களின் பெரும் பொறுப்பாக இருக்கும்.
சிங்கப்பூரில் வசிக்கும் ஒருவரது சராசரி ஆயுள்காலம் 80 வயதைத் தாண்டிவிட்டது. இதனால், பெற்றோர், மாமனார், மாமியார், பிள்ளைகள் ஆகியோரைப் பராமரிக்கும் பணியும் இந்த 'சேண்ட்விச்ட்' தலைமுறைக்குச் சில நேரங்களில் சுமையாகிவிடுகிறது.
பள்ளி செல்லும் பிள்ளைகளுக்குக் கைச்செலவு, அவர்களின் துணைப்பாட வகுப்புக்கான கட்டணம், அவர்களின் போக்குவரத்து மற்றும் உணவுக்கான பணம், வயதான பெற்றோருக்கான மருத்துவச் செலவுகள் என வரிசையாகப் பல செலவுகளை கவனிக்க வேண்டியுள்ளது.
இத்துடன் சொந்தச் செலவுகள், கைப்பேசிப் பயன்பாட்டுக் கட்டணம், வீட்டுக் கடன் ஆகிய செலவுகளையும் சமாளிக்க வேண்டும்.
அதிலும், குழந்தைப் பராமரிப்பு நிலையத்திற்குப் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர், மாதம் $500 முதல் $800 வரை கட்ட வேண்டியும் உள்ளது. ஒரே தலைமுறையை நம்பி இரு வேறு தலைமுறைகள் இருக்கும்போது, பொறுப்புகளைத் திட்டமிட்டு ஆற்றுவது முக்கியம்.
1. உடன்பிறப்புகளுடன் பொறுப்பை பகிர்ந்துகொள்ளுங்கள்
உங்களுக்கு உடன்பிறப்புகள் இருப்பின், உங்களின் குடும்பச் சூழ்நிலை, நிதி நிலை, பராமரிப்புக்குத் தேவையான வசதிகள் போன்ற அம்சங்கள் குறித்து வெளிப்படையாக அவர்களுடன் பேசுங்கள். இவ்வாறு வெளிப்படையாகப் பேசிவிட்டால், நாளடைவில் ஏற்படக்கூடிய சண்டை சச்சரவுகளைத் தவிர்க்கலாம்.
2. பெற்றோரின் சுகாதாரப்
பிரச்சினைகளைக் கவனியுங்கள்
உங்களின் பெற்றோர் அடிக்கடி மருத்துவப் பரிசோதனைகளுக்குப் போகாதவர்களாக இருந்தால், உடனே அவர்களை அழைத்துச் செல்லுங்கள்.
ஏதேனும் நோய் இருந்தாலும்கூட, ஆரம்பக்கட்டத்திலேயே அதை அடையாளம் கண்டுவிட்டால் மருத்துவச் செலவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ளலாம். தற்போது அவர்கள் பார்ப்பதற்கு ஆரோக்கியமாக இருந்தாலும், பிற்காலத்தில் அவர்களின் மருத்துவத் தேவைகளுக்கு நீங்களும் உங்களின் உடன்பிறப்புகளும் ஒதுக்கி வைக்க வேண்டிய தொகையைப் பற்றி முன்னரே மதிப்பிடுவது நல்லது.
3. நிதித் திட்டமிடுதலைச் செய்ய பெற்றோருக்கு உதவுங்கள்
ஓய்வுக்காலத்தில் போதுமான நிதியை உங்களின் வயதான பெற்றோர் ஒதுக்கி வைத்திருந்தால் கவலைப்படத் தேவையில்லை.
இருப்பினும், அவ்வாறு அவர்கள் திட்டமிடாமல் இருந்தால், நிதித் திட்டமிடுதலைச் செய்வதற்காக அவர்களுக்கு உதவ முயற்சி செய்யுங்கள்.
அவர்களின் முதலீடுகள், சொத்துகள் போன்றவற்றைப் பட்டியலிட்டு அவர்களுக்கு விருப்பமான வாழ்க்கைமுறையை ஓய்வுக்காலத்தில் மேற்கொள்ள முடியுமா என்பதை அவர்களுக்குப் புரிய வைக்கலாம்.
காப்புறுதித் திட்டங்கள் அவர்களுக்கு இருப்பதும் முக்கியம். பெற்றோரின் ஓய்வுக்கால மசேநிதி கணக்கில் பிள்ளைகளும் பணம் நிரப்பும் சாத்தியம் இப்போது உண்டு.
4. அரசாங்க மானியங்கள்,
வழங்குதொகைகள், வரிக்
கழிவுகள் பற்றி அறிந்திடுங்கள்
பிள்ளைகள், மூத்தோர் தொடர்பில் பல அரசாங்க மானியத் திட்டங்கள் உள்ளன. முன்னோடித் தலைமுறைத் தொகுப்புத்திட்டம், 'பேபி போனஸ்' திட்டம் போன்றவற்றின் மூலம் குடும்பச் செலவுகளைச் சமாளிக்கலாம்.
இதற்கிடையே, தற்போது சிறு பிள்ளைகளாக இருந்தாலும் பின்னாளில் அதே பிள்ளைகளின் மேற்படிப்புக்கு நீங்கள் இப்போதே சேமிக்கத் தொடங்கலாம்.
வயதான பெற்றோருக்கு தீவிர மருத்துவப் பராமரிப்பு தேவைப்படும் நிலையும் வரலாம். 10 அல்லது 20 ஆண்டுகளில் உங்களுக்குத் திடீரென ஏற்படக்கூடிய அசம்பாவிதத்திற்கும் முன் ஏற்பாடு தேவை. இவற்றைக் கருத்தில் கொண்டு உங்களின் வரவுசெலவுகளைத் திட்டமிடுவது சிறப்பு.
செய்தி: இணையம்

