சிங்கப்பூரை அறிவார்ந்த தேசமாக மாற்றும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஏற்ப, சிறுவர் முதல் பெரியவர் வரை ஏதேனும் ஒரு தகவல் தொடர்புச் சாதனத்தையோ தொழில்நுட்பத்தையோ நாடிய வண்ணம் உள்ளனர். 2017ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, 70% சிங்கப்பூரர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதாகக் கண்டறியப்பட்டது.
குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், அடிக்கடி பார்த்திராத சொந்தங்கள் என மக்கள் பெரிதும் நாடும் தளமாக இந்தச் சமூக ஊடகங்கள் மாறிவிட்டன. இருப்பினும், சமூக ஊடகங்களை இவ்வாறு அதிகமாகப் பயன்படுத்தும்போது ஒரு சில சிக்கல்களும் உதிக்கவே செய்கின்றன. குறிப்பாக, வாழ்க்கை குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கும் வயதில் உள்ள இளையர்களுக்குச் சமூக ஊடகங்கள் சில நேரங்களில் வில்லங்கமாக மாறிவிடுகின்றன.
உதாரணத்திற்கு, சமூக ஊடகங்கள் வழி தங்களின் நண்பர்கள் என்ன செய்கிறார்கள், என்ன பதிவிட்டார்கள் ஆகியவற்றைப் பார்க்க இளையர்கள் ஆர்வமாக இருப்பர். அவ்வாறு பார்த்த பின்பு, தங்களின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள், தங்களின் சாதனைகள் ஆகியவற்றை நண்பர்களுடன் ஒப்பிடவும் செய்கின்றனர்.
விடாமல் தொடரும் இந்த ஒப்பீடும் இந்தப் போட்டித்தன்மையும் இளையர்களிடையே அழுத்தத்தை ஏற்படுத்திவிடுகின்றன.
பிறர் வாழ்க்கையில் நல்லது நடக்கிறதே என்ற ஏக்கமும் தன் வாழ்க்கையில் அப்படிப்பட்ட குறிப்பிடத்தக்க நிகழ்வு ஏதும் நடக்கவில்லையே என்ற வருத்தமும் சேர்ந்து ஒருவித தாழ்வு மனப்பான்மையைத் தருகின்றன.
இதுபோன்ற அழுத்தம் தரும் அம்சங்களைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் மனச் சோர்வு, கவலை, உணவு உண்பது தொடர்பான கோளாறுகள் போன்றவற்றுக்கு இளையர்கள் எளிதில் ஆளாகிவிடலாம்.
தங்களுக்கு மதிப்பு அளிப்பதுடன் அடையாளத்தையும் தரும் கருவியாகச் சமூக ஊடகங்களை இளையர்கள் பார்க்கின்றனர் என்று இங்குள்ள மனநல ஆர்வலர்களும் சமூக அமைப்பினரும் கூறுகின்றனர். தங்களின் பதிவுக்குப் பலரும் 'லைக்' போட வேண்டும் என்பதை எதிர்பார்த்தே இளையர்கள் சிலர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று நிபுணர்கள் சுட்டியுள்ளனர்.
இணைய உலகைப் பாதுகாப்பாக வலம்வருவது எப்படி என்பதை இளையர்களுக்குக் கற்றுத் தந்தால், சமூக ஊடகப் பயன்பாடு பாதுகாப்பானதாக மாறும் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
செய்தி: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

