மாதரிடையே எண்மரில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ள நிலையில், ஆண்களுக்கும் இந்நோய் வரலாம் என்னும் உண்மை பலரையும் வியக்க வைக்கிறது.
அனைத்துலக அளவில் பெண்களிடையே அதிகம் கண்டறியப்படும் புற்றுநோய் வகை, இந்த மார்பகப் புற்றுநோய் என்று உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்களிடையே மார்பகப் புற்றுநோய் காணப்படுவது அரிது என்றாலும் பாதிப்பு ஒன்றுதான்.
அத்துடன் பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கான மார்பகப் புற்றுநோய் இறப்பு விகிதம் அதிகம் என்று கூறப்படுகிறது.
பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களிடையே மார்பகப் புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், 60 வயதுக்கும் குறைவான ஆண்களை இப்புற்றுநோய் பாதிப்பதும் உண்டு.
ஆண்களிடையே மார்பகப் புற்றுநோய் ஏன் வருகிறது என்பதை உறுதியாகக் கூற முடியாது.
இருப்பினும், அவரின் மரபணுக்கள் பாதிக்கப்பட்டிருந்தாலோ அவரின் குடும்ப உறுப்பினர்கள் அதற்குமுன் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தாலோ மார்பகப் புற்றுநோய் ஏற்படும் சாத்தியம் அதிகம்.
மார்புப் பகுதியில் முன்னதாக கதிரியக்கச் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தாலும் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் வரும் அபாயம் அதிகரிக்கிறது.
மார்புப் பகுதியில் கட்டி, மார்புக் காம்புகளில் கசிவு, மார்புக் காம்பு உட்புறமாக இழுக்கப்படுதல் போன்ற எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டால் குடும்ப மருத்துவரை நாடி ஆலோசனை பெறலாம்.
ஆண்கள் தங்களுக்கு மார்பகப் புற்றுநோய் வந்துள்ளது என்பதை எண்ணி வெட்கப்படுவதற்கு ஒன்றுமில்லை என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே அடையாளம் கண்டு உடனே சிகிச்சை பெற்று குணமடைவதே முக்கியம் என்கிறார்கள். சிகிச்சை பெறுவதைத் தாமதப்படுத்தினால் மார்பகப் பகுதி, தோல் ஆகியவற்றுக்கும் புற்றுநோய் பரவக்கூடும்.
மது அருந்துவதைத் தவிர்ப்பது, உடல் பருமனைக் குறைப்பது, சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பது, ஆரோக்கிய உணவு வகைகளைச் சாப்பிடுவது போன்ற வழிகளில் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
செய்தி: இணையம்

